பிரதமரின் வெளிநாட்டுப் பயணத்தால் கிடைத்தது என்ன? சிவசேனா கேள்வி

மும்பை

பிரதமரின் வெளிநாட்டுப் பயணத்தினால் நாட்டுக்கு என்ன கிடைத்துள்ளது என சிவசேனா கேள்வி எழுப்பி உள்ளது.

பிரதமர் மோடி அடிக்கடி வெளிநாட்டுப் பயணம் செய்து வருகிறார். இது வரை இருந்த இந்தியப் பிரதமர்களில் அதிக வெளிநாட்டுப் பயணம் செய்தவர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து பல எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.

பாஜகவின் முன்னாள் கூட்டணிக் கட்சியான சிவசேனாவின் சாம்னா நாளேட்டில் வெளியான தலையங்கத்தில், :”இந்தியப் பிரதமர்களில் அதிக முறை வெளிநாட்டுபயணம் செய்தவர் என மோடி சாதனை புரிந்துளார். ஆனால் அவருடைய இந்த வெளிநாட்டுப் பயணத்தால் நாட்டுக்கு என்ன பயன் கிடைத்தது ?

மகாவிஷ்ணு தனது பக்தர்களுக்கு ஓடோடி சென்று காட்சி அளிப்பது வழக்கம். மோடி மகாவிஷ்ணுவின் அவதாரமா? அவர் ஏன் உலகம் எங்கும் சென்று காட்சி அளித்து வருகிறார்? இதுவரை பல நாடுகளுடன் நல்லுறவு இல்லை எனவும் அந்த நல்லுறவை உண்டாக்க மோடியின் சுற்றுப் பயணம் உதவியதாவும் கூறப்படுகிறது. ஆனால் நமக்கு அதனால் என்ன லாபம்?

மோடி பிரான்ஸ் சென்று ரபேல் போர்விமான ஒப்பந்தம் செய்தார். அது தற்போது கடும் சர்ச்சையில் உள்ளது. இந்தியா ரஷ்யாவுடம் எஸ் 400 ஏவுகணை வாங்க ஒப்பந்தம் செய்ததால் அமெரிக்கா கோபம் அடைந்துள்ளது. ரஷ்ய ஒப்பந்தத்தை ரத்து செய்யவும் தங்களிடம் இருண்டு எஃப் 16 ரக போர் விமானம் வாங்கவும் அமெரிக்கா வற்புறுத்துகிறது.

இந்த எஃப் 16 போர் விமானங்களை ஏற்கனவே பாகிஸ்தான் வாங்கி இருப்பதால் அந்த தொழில் நுட்பம் பற்றி அந்நாட்டுக்கு நன்கு தெரியும். அதே விமானம் வாங்க வேண்டும் என அமெரிக்கா இந்தியாவை வற்புறுத்துகிறது. இதற்கு காரணம் இந்தியாவும் பாகிஸ்தானும் நேச நாடுகளானால் ஆயுத விற்பனை சரிந்து விடும் என பல நாடுகளும் நினைப்பது தான்.

உலகெங்கும் நல்லுறவை நாடும் இந்தியாவுக்கு அண்டை நாடுகளுடன் நல்லுறவு இல்லை. இந்து நாடாக உள்ள நேபாளம் கூட சீனா மற்றும் பாகிஸ்தான் சொல்படி நடந்து வருகிறது. இவ்வாறு இருக்கையில் கோடிக்கணக்கில் செலவு செய்து மோடி செய்து வரும் வெளிநாட்டு பயணத்தால் இந்தியாவுக்கு என்ன கிடைத்துள்ளது” என சரமாரியாக கேள்விகளை எழுப்பி உள்ளது.