எட்டு வழிச்சாலையால் என்னென்ன நன்மைகள்: மத்தியஅரசு பட்டியல்

சென்னை:

சென்னை – சேலம் இடையே அமைக்கப்பட உள்ள 8வழி பசுமை எக்ஸ்பிரஸ் சாலை திட்டத்தால் பொதுமக்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்பது குறித்து மத்திய அரசு பட்டியலிட்டு விளக்கி உள்ளது.

சென்னை – சேலம் இடையே  பசுமை வழித்தடம் அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் நெடுஞ் சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி அறிவித்திருந்தார். சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாயில் அமைக்கப்பட்ட உள்ள சேலம் – சென்னை  பசுமை வழித்தடம்  காரணமாக தமிழகத்தில் தொழில் வளர்ச்சி பெருகும் என்றும்,   பயண நேரம் 2 மணி நேரம் குறையும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த திட்டத்துக்கு தமிழக அரசும் ஒப்புதல் அளித்து,  சாலை அமைக்கும் பணிக்காக நிலம் கையப்படுத்தும்  நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த சாலை திட்டத்துக்கு அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தங்களது  விவசாய நிலங்கள், வீடுகள், இயற்கை வளங்கள் அழிக்கப்பட இருப்பதாக கூறி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை சேலம்  எட்டுவழிச்சாலை திட்டத்தால் தமிழகத்திற்கு  கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை குறித்து மத்திய அரசு விளக்கம்  தெரிவித்து உள்ளது.

சேலம் – சென்னை இடையேயான 277.30 கிலோ மீட்டர் பசுமை வழிச்சாலைக்காக மலைகள் எதுவும் சேதப்படுத்தப்படாது

பசுமை வழிச்சாலையால் பயண நேரம் குறைவதோடு, ஆண்டுக்கு 6 கோடி லிட்டர் டீசல் செலவு மிச்சமாகும்

டீசல் பயன்பாடு குறைவதால் காற்றில் கலக்கும் கோடிக்கணக்கான கிலோ மாசு குறையும்

பசுமை வழிச்சாலையால், தூரம் குறைவதால், ஒரு மூட்டைக்கு ஐந்து பைசா குறையும்

முழுமையான இழப்பீட்டு தொகை வழங்கிய பின்னரே கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் திட்டத்திற்காக எடுத்துக்கொள்ளப்படும்

பசுமை வழிச்சாலைக்காக நிலங்களை வழங்கியவர்களுக்கு 4 மடங்கு இழப்பீடு வழங்கப்படும்

கட்டிடம், வீடு அல்லது வியாபார கட்டிடமாக இருக்குமானால் சதுர அடிக்கு ரூ.2000 இழப்பீடு 

நிலம், வீடுகளை இழந்தவர்களுக்கு ரூ.1.50 லட்சமோ (அ) பிரதமர் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் வீடோ வழங்கப்படும் 

பள்ளிகள், அங்கன்வாடி மையங்களுக்கு மாற்று இடங்கள் கொடுக்கப்பட்ட பின்னர் தான் நிலம் கையகப்படுத்தப்படும் 

நிலத்திலுள்ள மரங்கள், கட்டிடங்கள், கிணறு போன்றவற்றிற்கு தனித்தனியே இழப்பீடு

சாலை விரிவாக்கத்திற்காக வெட்டப்படும் மரங்களுக்கு பதிலாக, சாலையின் இருமருங் கிலும் 10 மீட்டர் அகலத்திற்கு சுமார் மூன்று லட்சம் மரக்கன்றுகள் நடப்படும்   

கட்டிடங்களுக்கு தேய்மான மதிப்பு ஏதும் கணக்கிடப்படாமல் தனியே இழப்பீடு வழங்கப்படும்

பசுமை வழி விரைவுச்சாலையை மேம்பாலம் மூலம் அமைக்க கிலோ மீட்டருக்கு ரூ.140 கோடி வரை செலவாகும் 

செலவினங்களை குறைக்கவே  ரூ.15 கோடி செலவில் தரை மார்க்கமாக இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாக விளக்கம் அளித்துள்ளது.