கல்விக்கடன் வழங்க தகுதிகள் எவை? எஸ்பிஐ வங்கிக்கு சென்னை உயர்நீதி மன்றம் கேள்வி

--

சென்னை:

மாணவர்களின் உயர்கல்வி படிப்புக்கான  கல்விக்கடன் வழங்க என்ன தகுதிகள் நிர்ணயிக்கப் பட்டு உள்ளது என்பதை தெரிவிக்க  எஸ்பிஐ வங்கிக்கு  சென்னை உயர்நீதி மன்றம் கேள்வி விடுத்துள்ளது.

உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு எந்தவித நிபந்தனையும் இன்றி கல்விக்கடன் கொடுக்க வேண்டும் என்று மத்தியஅரசு உத்தரவிட்டு உள்ளது. ஆனால், பெரும்பாலான வங்கிகள் மாணவ மாணவிகளின் படிப்புக்கு தேவையான கல்விக்கடன்களை வழங்குவதில்லை.

கடனுக்காக வீட்டின் பத்திரம் அல்லது சொத்து பத்திரம் வாங்கிக்கொண்டே கடன் வழங்கி வருகிறது. இல்லையென்றால் வேறு ஏதாவது ஒரு காரணம் கூறி கல்விக்கடன் கொடுப்பதை தவிர்த்து வருகிறது.

இந்த நிலையில் கல்விக்கடன் கொடுக்க மறுத்த எஸ்பிஐ வங்கி மீது மாணவி ஒருவர் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

நாகை மாவட்டத்தை சேர்ந்த மாணவி தீபிகா என்பவர் தனது மேற்படிப்புக்காக அருகிலுள்ள தலைஞாயிறு எஸ்பிஐ வங்கியில் கல்விக்கடன் கேட்டு மனு  கொடுத்திருந்தார். அவருக்கு கல்விக்கடன் கொடுக்க வங்கி மறுத்துவிட்டது.

இதை எதிர்ந்து அந்த மாணவி சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம், எஸ்.பி.ஐ வங்கிக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.

மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க என்னென்ன தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கல்விக் கடன் பெற 60% மதிப்பெண் வேண்டும் என்பது எதன் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது?  என்ற கேள்விகளுக்கு பதில் அளிக்குமாறும், அடுத்த விசாரணை நடைபெறும் ஜூலை 23ந்தி அன்று தலைஞாயிறு எஸ்.பி.ஐ. வங்கி மேலாளர் நீதி மன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டு உள்ளது.