சென்னை:

மிழக அரசு சார்பில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி விளக்கமாக எடுத்துரைத்தார்.

அதன்படி,

* அரசு மருத்துவமனைகளில் தற்போது உள்ள 92,406 உள் நோயாளி படுக்கை வசதிகளில், 9,266 படுக்கைகளை கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு தேவையான தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகளாக மாற்றப்பட்டுள்ளன. தேவைக்கேற்ப இந்த எண்ணிக்கை மேலும் உயர்த்தப்படும்.

*  தனியார் மருத்துவமனை நிர்வாகங்களோடு கலந்து ஆலோசிக்கப்பட்டு, தமிழகத்திலுள்ள பெரிய தனியார் மருத்துவமனைகளிலும், ஏற்கனவே இருக்கக் கூடிய படுக்கை வசதிகளில் 750 படுக்கை வசதிகள் கொரோனா வைரஸ் சிகிச்சைக்கான தனி படுக்கை வசதிகளாக மாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் குறித்து தவறான தகவல்களை பரப்பும் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது பொது சுகாதார சட்டம் 1939ன் விதி 41, 43, 44-ன் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர், அதற்கான அறிகுறிகள் தென்பட்டு, வேலை செய்யும் இடத்திலோ, விடுதியிலோ, வீட்டிலோ இருந்தால், அவரைப் பற்றிய தகவல்களை அருகாமையில் உள்ள சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற சுகாதார நிலையங்கள் அல்லது 24 மணி நேர மாநில கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான தகவல்களை உடனுக்குடன் எற்கனவே அறிவிக்கப்பட்ட தொடர்பு எண்ணிலும் (04429510500, 29510400 மற்றும் கைபேசி எண்.94443 40496, 8754448477 மற்றும் இலவச சேவை எண்.1800 120 555550) ஆகிய மையங்களில் உடனடியாக தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட தொழிற்சாலை மேலாளர், விடுதி உரிமையாளர் மற்றும் குடும்பத் தலைவர் ஆகியோரின் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

வெளிநாடு பயணித்தோர் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தோர் ஆகியோரை தீவிரமாக கண்காணித்து, சமுதாயத்தின் நலன் கருதி, சுய தனிமைப்படுத்துதல் மூலம், அவர்கள் யாரும் பொது மக்களுடன் தொடர்பு கொள்ளாமல் இருப்பதை கண்காணிக்க வேண்டும். சோதனைச் சாவடிகளில் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட வேண்டும்.

அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள், பழக்கடைகள், பால் அங்காடிகள் போன்ற இடங்களில் தூய்மையைப் பராமரிப்பதை, உள்ளாட்சி அமைப்புகள் முறையாக கண்காணித்து, தூய்மைப்படுத்த வேண்டும். காவல் துறை, இத்தகைய கடைகளில் மக்கள் அதிகம் கூடாதவாறு கண்காணிக்க வேண்டும்.

மக்கள் இந்த சூழ்நிலையின் தீவிரத்தை உணர்ந்து முழு மனதோடும், மன உறுதியோடும் தமிழ்நாடு அரசோடு தோளோடு தோள் நிற்க வேண்டும். அனைவரும், குறிப்பாக வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து தமிழகம் திரும்பியவர்கள், முழுமையான தகவல்களை சுகாதாரத் துறைக்கு அளித்து முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று வேண்டி வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.