எடப்பாடி தலைமையில் நடைபெற்ற கேபினட் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் என்னென்ன?

சென்னை:

மிகவும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய தமிழக முதல்வர் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில், மேகதாது, ஸ்டெர்லைட் தொடர்பாக எந்தவித கொள்கை முடிவும் எடுக்கப்பட வில்லை என்று தெரிகிறது.

மேலும், 16 தொழில் நிறுவனங்களின் விரிவாக்கத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்திற்கு மேகதாது, ஸ்டெர்லைட், கஜா நிவாரணம் உள்பட  பல தரப்புகளில் இருந்து பல்வேறு வகையான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வரும் நிலையில், இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் கூடியது.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி  பழனிசாமி தலைமையில் பிற்பகல் 12.30 மணி முதல் 1.45 மணிவரை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.  இந்தக் கூட்டத்தில் செயல்பாட்டில் உள்ள 16 தொழில் நிறுவனங்களை விரிவுபடுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக ஒப்புதல் அளிக்கப்பட்ட நிறுவனங்கள் மேலும்  14 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யும் என்றும், அதன் காரணமாக  சுமார் 30 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வேலை வாய்ப்பு பெறுவார்கள் என கூறப்படுகிறது.

மேலும், 2019ம் ஆண்டு  ஜனவரி 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர் மாநாடு குறித்தும் விவாதிக்கப்பட்டது. அந்த மாநாட்டில் கலந்து கொள்பவர்கள், அவர்களிடம் இருந்து முதலீடுகளை ஈர்ப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும்  மேகதாது மற்றும் ஸ்டெர்லைட் விவகாரங்கள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக் கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்த விவகாரங்களில் என்ன முடிவு எடுக்கப்பட்டது என்ற விவரங்கள் வெளியாகவில்லை.