சென்னை :

ண்டனில் இருந்து வருபவர்களை பார்த்து தெறித்து ஓடவைத்திருக்கும் உருமாற்றம் பெற்று பரவி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவில் என்ன விதமான பாதிப்பை ஏற்படுத்தும் அதனால் என்ன விளைவுகள் உண்டாகும் என்பது குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்து வருகிறது.

இது குறித்து சென்னையை சேர்ந்த மருத்துவமனை அளித்துள்ள விளக்கம் :

உலகில் எந்த ஒரு வைரசும் மனித உடலுக்குள் ஊடுருவியதும், உடலில் ஏற்கனவே வலுவிழந்து பாதிப்படைந்திருக்கும் செல்களை வேகமாக பாதித்து தன்னை நகலெடுக்க தொடங்கும், பின் அந்த மனிதரின் குணாதிசயங்களுக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொண்டு, மற்ற நல்ல செல்களிலும் நகலெடுத்து முழுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.

இவ்வாறு உருமாற்றம் பெறுவது அனைத்து வைரசுக்கும் பொதுவான ஒன்று. கொரோனா வைரஸை பொறுத்தவரை இதுவரை 1000 க்கும் மேற்பட்ட உருமாற்றங்களை பெற்றுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இருப்பினும், உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ்களில் 25 மட்டுமே பரவலாக பல்வேறு இடங்களில் காணப்பட்டது என்று மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதுபோல் மாற்றம் பெற்ற சில நூறு வைரஸ்கள் அதைப்பற்றி அறியும் முன்னரோ அல்லது எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தாமலோ மறைந்து போய் விட்டது.

இங்கிலாந்தில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த புதிய கொரோனா வைரஸ், செப்டம்பர் மாதமே அங்கு தோண்றியிருக்க வேண்டும், அதன் தொடர்ச்சியாகவே தற்போது இது அதிகளவில் பரவியுள்ளது.

செப்டம்பர் மாதம் இந்த புதிய உருமாற்றம் நிகழ்திருக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படும் அதே நேரத்தில், டிசம்பர் மாதம் முதல் ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் கொரோனா பரவலும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருவது அதிர்ச்சியளிக்கிறது.

உருமாற்றம் பெற்றுள்ள இந்த புதிய வகை கொரோனா வைரஸ் இந்தளவுக்கு பரவுவதற்கு எடுத்துக்கொண்ட கால அளவை வைத்து பார்க்கும் போது, இது மற்ற கொரோனா வைரஸை காட்டிலும் 70 சதவீதம் வேகமாக பரவக்கூடியது என்பது தெரியவருகிறது.

இந்த புதிய வைரஸால், உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் ஆபத்து ஏதும் இல்லை என்றாலும், மற்ற வைரஸைகளை போல் இல்லாமல், 20 மடங்கு அதிக வேகத்தில் தன்னை நகலெடுக்கும் திறன் கொண்டதாக இருப்பதால், இது உடலில் ஊடுருவியதும் பாதிப்பை அதிகரிக்கும் தன்மையுள்ளது.

இந்தவகை வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக பாதிப்பை சந்தித்ததற்கான மருத்துவ ஆதாரம் இல்லையென்றாலும், 10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளும், இணை நோய்கள் உள்ள முதியவர் உள்ளிட்ட அனைவரும் கவனமுடன் இருக்க வேண்டும்.

நவம்பர் மத்தியில் இந்த புதிய வகை வைரஸ் பரவல் நிலை 25 சதவீத என்ற அளவில் இருந்தது டிசம்பர் மாதத்தில் 67 சதவீதமாக வேகமாக பரவியாதாலேயே, இங்கிலாந்து அரசு பொதுமுடக்கம் அறிவித்தது, இங்கிலாந்து மட்டுமல்ல உலகின் வேறு எந்த நாடாக இருந்தாலும் இதைத்தான் செய்திருக்க முடியும்.

இங்கிலாந்துடனான விமான போக்குவரத்தை இந்திய அரசு நிறுத்தியுள்ள போதிலும், கடந்த ஒரு மாத காலத்தில் லண்டனிலிருந்து இந்தியா வந்தவர்களுக்கு நோய் தொற்று உள்ளதா என்பதை ஆராய்ந்து வருகிறது மத்திய சுகாதாரத்துறை.

இந்தியாவில் இந்த வகை வைரஸ் குறித்து கவலைகொள்ளும் விதத்தில் தகவல் எதுவும் வரவில்லை என்றாலும், மக்கள் இது குறித்து பீதியடையவோ அச்சம் கொள்ளவோ தேவையில்லை. கொரோனா வைரஸை எதிர்கொள்ள நாம் மேற்கொண்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்வது நல்லது

என்று அந்த மருத்துவமனை அளித்துள்ள விளக்கத்தில் கூறியுள்ளது.