கட்சித் தாவல் தடைச்சட்டம் ஏற்படுத்திய தாக்கம் என்ன?

இந்தியா போன்ற நாடுகளில் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சித் தாவுவது வழக்கமாக நிகழும் ஒன்றாக இருக்கிறது. கட்சித் தாவலுக்கு கட்டுப்பாடு இல்லாதபோது, அரசுகளின் ஸ்திரத்தன்மை அடிக்கடி பாதிக்கப்பட்டு, இதனால் அரசியல் அலங்கோலம் நிகழ்ந்து, உலகளவில் நாட்டின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுகிறது.

எனவே, சட்டமியற்றும் மன்றங்களின் உறுப்பினர்களுடைய தாவலுக்கு ஒரு முடிவுகாண வேண்டுமென அரசியல் கட்சிகளிடையே சிந்தனை ஏற்பட்டாலும், அவர்களுக்கிடையே சில விஷயங்கள் தொடர்பாக ஒத்த கருத்தை ஏற்படுத்துவது சாதாரண ஒன்றாக இருக்கவில்லை.

இறுதியில், ஒரு வழியாக முடிவு எட்டப்பட்டு, 1985ம் ஆண்டு ராஜீவ் காந்தி பிரதமராக இருக்கையில் கட்சித் தாவல் தடைச்சட்டம் இயற்றப்பட்டது. அதேசமயம், தொடக்கத்தில் கட்சியில் பிளவு ஏற்பட்டு, மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் விலகினால், தடைச்சட்டம் பாயாது என்றிருந்த விதியால், பல சிக்கல்கள் எழுந்தன. எனவே, அந்த விதியை நீக்க வேண்டுமென்ற கோரிக்கையின்படி அதுவும் நீக்கப்பட்டது. கடந்த 2003ம் ஆண்டு இந்த மாற்றம் நிகழ்ந்தது.

பின்னர், இரண்டு கட்சிகளை இணைப்பது என்று முடிவு செய்யப்பட்டு, அந்த இணைப்பை மூன்றில் இரண்டு பங்கு சட்டமியற்றும் மன்றங்களின் உறுப்பினர்கள் ஆதரித்தால், அப்போது கட்சித்தாவல் தடைச்சட்டம் பாயாது என்ற விதிமுறை மட்டுமே விட்டு வைக்கப்பட்டது.

இந்த சட்டத்தால் பல நல்ல விளைவுகள் ஏற்பட்டுள்ளன என்பதை மறுக்க முடியாது. இதனால், பல ஆட்சிகள் காப்பாற்றப்பட்டுள்ளன மற்றும் இந்திய ஜனநாயகம் கேலிக்கூத்தாவதும் தடுக்கப்பட்டுள்ளது.