காவிரி மேலாண்மை ஆணையத்தின் அதிகாரங்கள் என்னென்ன?

டில்லி :

காவிரி மேலாண்மை  ஆணையத்தின் முதல் ஆலோசனைக் கூட்டம் டில்லியில் இன்று காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி, கேரளா மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர்.

உச்சநீதி மன்ற உத்தரவுபடி காவிரி மேலாண்மை ஆணையத்தையும், ஒழுங்காற்று குழுவையும்  மத்திய அரசு அமைத்து  உத்தரவிட்டுள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கான தலைவர் நியமிக்கப்பட்ட நிலையில், காவிரி மேலாண்மை  ஆணையம் அமைக்கப்பட்டு செயல்பாட்டுக்கு  வந்துவிட்டதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது.

உச்சநீதி மன்ற உத்தரவுபடி அமைக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு மாநிலங்களும் தங்களது மாநிலங்கள் சார்பாக  உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்ட நிலையில் முதன்முறையாக, காவிர் நீர் மேலாண்மை ஆணையம் டில்லியில் இன்று  கூடுகிறது.

இந்த நிலையில், காவிரி மேலாண்மை  ஆணையத்தின் அதிகாரங்கள் யாவை என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.

உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் படி அனைத்து பணிகளையும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மேற்கொள்ளும்

காவிரி நீர் சேமிப்பு, பகிர்மானம், ஒழுங்காற்றுமை உள்ளிட்ட அனைத்தையும் இந்த ஆணையம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்.

மேலும் அணையின் நீர் திறப்பு, செயல்பாடுகளை இந்த ஆணையமே கண்காணிக்கும், அதற்கே அனைத்து அதிகாரமும் உள்ளது.

ஜூன் மாதம் காவிரி நீராண்டின் முதல் மாதமாக கருதப்படும், அம்மாதத்தில் காவிரியில் உள்ள அணைகளின் நீரை கணக்கெடுத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1ம் தேதி 4 மாநில அரசுகளும் தங்களது அணைகளிலுள்ள காவிரி நீர் குறித்த அறிக்கையை சமர்பிக்க வேண்டும்.

பருவ மழை காலங்களில் 10 நாட்களுக்கு ஒரு முறை காவிரி அமைப்பின் கூட்டததை கூட்ட வேண்டும். அவசர காலத்தில் 48 மணி நேரத்தில் கூட்டத்தை கூட்டலாம்.

காவிரி ஆற்று படுகைகளில் உள்ள பானசுரசாகர் அணை, ஹேமாவதி, ஹேரங்கி,கபினி, கிருஷ்ணராஜ சாகர், மேட்டூர் ஆகிய அனைத்து அணைகளும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துடன் வழிகாட்டுதலின்படி சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் கட்டுபாட்டில் இயக்கப்படும்.

மேலும் அணையின் பராமரிப்பு உள்ளிட்ட பணிகளை ஆணையத்துடன் இணைந்து மட்டுமே செயல்படுத்த முடியும்.

அணைகளில் புதிய கட்டுமானங்களை ஆணையம் மேற்கொள்ளலாம். ஆனால் சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதி , மத்திய நீர் வள துறையின் ஒப்புதலுடன் மட்டுமே அந்த பணிகளை மேற்கொள்ள முடியும்

காவிரி தீர்ப்பின்படி ஒரு மாநிலத்திற்கு திறக்க வேண்டிய நீரை மற்ற மாநிலம் குறைவாக திறந்தால், அடுத்த முறை நீர் திறப்பின் போது நீர் குறைவாக தந்த மாநிலத்தின் நீரின் அளவை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் குறைத்துவிடும்.

நீர் திறப்பில் தாமதமோ, பற்றாக்குறையோ எந்த மாநில அரசு செய்தாலும் அந்த அரசின் மீது நடவடிக்கை எடுக்க காவிரி நீர் மேலாண்மை  ஆணையத்திற்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் எடுக்கும் முடிவுக்கு மாநில அரசுகள் கட்டுப்பட்டே ஆக வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி  தமிழக அரசு தொடர்ந்த வழக்கில்  உச்சநீதி மன்ற உத்தரவுப் படி, மத்திய அரசு  காவிரி வரைவு திட்டத்தை ஏற்படுத்தி காவிரி மேலாண்மை ஆணையம்  அமைத்து உத்தரவிட்டது. அதன்படி ஆணையத்திற்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்ட நிலையில் இன்று ஆணையத்தின் முதல்கூட்டம் டில்லியில் நடைபெறுகிறது.

கார்ட்டூன் கேலரி