தேசிய விருது விழாவில் ஜனாதிபதி பங்கேற்காதது துரதிர்ஷ்டவசமானது….சத்ருகன் சின்கா

மும்பை:

தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் ஜனாதிபதி கலந்துகொண்டு விருதுகளை வழங்காதது பெரும் பிரச்னையானது. இதனால் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி தலைமையில் நடந்த விழாவை கலைஞர்கள் சிலர் புறக்கணித்தனர்.

இந்நிலையில் இது குறித்து நடிகரும், அரசியல்வாதியுமான சத்ருகன் சின்கா கூறுகையில், ‘‘ துரதிரிஷ்டவசமாக நடந்த இந்த நிகழ்வு தவிர்க்கப்பட வேண்டும். எனக்கு ஜனாதிபதியை தனிப்பட்ட முறையில் தெரியும். பீகார் கவர்னராக இருந்தபோது மனிதாபிமானம் மிக்கவராக இருந்தவர். அவர் யாருடைய உணர்வுகளையும் காயப்படுத்த நினைத்திருக்கமாட்டார். தவறான தகவல் தொடர்பு காரணமாக இது நடந்திருக்கலாம்.

இதன் மூலம் பலரது உணர்கள் காயப்படுத்தப்பட்டுள்ளது. இது இனி நடக்க கூடாது. நாட்டின் கலைஞர்களால் தேசத்துக்கு பெருமை. அவர்களை ஜனாதிபதியிடம் இருந்து விருது பெற அழைத்துவிட்டு வேறு ஒருவரது கைகளால் விருது வழங்கியது ஏற்புடையதல்ல. ஸ்மிருதி ராணி மதிப்பு மிக்க பாஜக உறுப்பினர். எனினும் இந்த விருதுகள் ஜனாதிபதியின் விருதுகள். அதை வேறு யாரும் கொடுக்க கூடாது’’ என்று தெரிவித்துள்ளார்.