காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நேற்று காணொலி காட்சி மூலம் நடைபெற்றது.
கூட்டத்தில் பங்கேற்ற காரியகமிட்டி உறுப்பினர்கள், மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்துள்ளனர்..

இந்த கூட்டத்தில் என்ன நடந்தது என்பது குறித்து முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு விளக்கமான பேட்டி அளித்துள்ளார்.

அதில் சிதம்பரம் தெரிவித்த கருத்துக்கள் இவை:
’’உயிரோட்டமுள்ள கட்சி என்றால், அந்த கட்சியில் அதிருப்தி இருக்கத்தான் செய்யும். கேள்விகள் எழுப்புவார்கள். அப்போது தான் மாற்றத்தை கொண்டுவர முடியும்.
கடல் என்றால் அலைகள் இல்லாமல் இருக்குமா? அலைகள் அடிக்காமல் இருந்தால், அது உயிரோட்டமுள்ள கடல் அல்ல. உயிர் இல்லாத கடல். செத்துப்போன கடல்.

காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில், அனைத்தும் சிறப்பாக நடந்து முடிந்ததாக சொல்ல மாட்டேன்.
சிலருக்கு அதிருப்தி இருந்தது. வருத்தம் இருந்தது. கேள்விகள் கேட்டார்கள். அந்த வினாக்களுக்கு பதில்களும், விளக்கமும் அவர்களுக்கு அளிக்கப்பட்டது.

சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய தலைவர்கள் என்னைப்போல், ராகுல்காந்தியை போல் , பா.ஜ.க.வை கடுமையாக எதிர்ப்பவர்கள் தான். அவர்களை யாரும் குறை கூறிப்பேசவில்லை. மோதலும் இல்லை. சில ஊடகங்கள் காரிய கமிட்டியில் நடக்காத விஷயங்களை இட்டுக்கட்டி கூறியுள்ளன.

காங்கிரஸ் கட்சிக்கு நிரந்தர தலைவரை தேர்வு செய்ய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று சிலர் கோரிக்கை வைத்துள்ளனர்.

மீண்டும் சொல்கிறேன். ஒரு கட்சிக்குள் அதிருப்தி இருந்தால் தான் மாற்றம் உருவாகும். அந்த கட்சி இன்னும் வேகமாக நடை போட வழி வகுக்கும்.’’ என்று விளக்கம் அளித்துள்ளார், ப.சிதம்பரம்.

-பா.பாரதி