என்ன ஆனது மும்பை அணிக்கு..?

ஐபிஎல் வரலாற்றில், மொத்தம் 5 முறை கோப்பை வென்ற அணி, என்ற பெருமையுடைய ரோகித் ஷர்மாவின் மும்பை அணி, இந்தமுறை தொடக்கம் முதற்கொண்டே தடுமாறி வருகிறது.

இந்தமுறை, இதுவரை தான் ஆடியுள்ள 5 போட்டிகளில், மூன்றில் தோற்றுள்ளது.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், அந்த அணியின் ரன்குவிப்புதான். ரோகித் ஷர்மா, சூர்யகுமார், இஷான் கிஷான், பொல்லார்டு, ஹர்திக் பாண்ட்யா போன்ற அதிரடி மன்னர்கள் இருந்தும், அந்த அணி, தான் இதுவரை ஆடிய 5 ஆட்டங்களிலும், மிகவும் குறைந்தளவு ரன்களையே எட்டியுள்ளது.

அதேசமயம், இந்த 5 போட்டிகளிலும் மும்பை அணி, முதல் பேட்டிங் ஆடியுள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது. மும்பை அணி, தான் ஆடிய முதல் போட்டியில், பெங்களூருவுக்கு எதிராக அடித்த 159 ரன்கள்தான் இதுவரையான அந்த அணியின் அதிகபட்ச ரன்கள்.

அடுத்து, கொல்கத்தாவுக்கு எதிராக அந்த அணி 152 ரன்களையும், ஐதராபாத் அணிக்கெதிராக 150 ரன்களையும், டெல்லி அணிக்கெதிராக 137 ரன்களையும் அடித்த மும்பை அணி, இன்று பஞ்சாப் அணிக்கு எதிராக அடித்ததோ வெறும் 131 ரன்கள் மட்டுமே!

ஆக, ஒன்றை கவனித்தால், அந்த அணியின் ரன் எண்ணிக்கை தொடர்ச்சியாக குறைந்துகொண்டே வருவதைப் பார்க்கலாம். சென்னை, பஞ்சாப், டெல்லி மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட அணிகள், 200 மற்றும் 190 ரன்களை கடக்கும்போது, மும்பை அணி இந்தமுறை துவக்கப் போட்டிகளில் இப்படி நொண்டியடிக்க காரணமென்ன? என்ற கேள்வி எழுந்துள்ளது.