விஜயகாந்துக்கு என்னாச்சு? மக்களை குழப்பும், தேமுதிக தலைமை மற்றும் மியாட் மருத்துவமனை…

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலப் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள நிலையில், அவரது உடல்நிலை குறித்து முரண்பட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. இது அரசியல் கட்சியினர் மட்டுமின்றி, தேமுதிக வினரிடையேயும் அதிருப்தியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல் கட்சித் தலைவர்களும் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று இரவில் திடீரென சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

சமீபத்தில் விஜயகாந்த் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டதால், அவருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. ஏற்கனவே உடல்நலம் பாதிப்பு காரணமாக, கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்த விஜயகாந்த், கடந்த ஆண்டு சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்ட பின் சென்னை திரும்பி  ஓய்வில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில்,  கடந்த 14-ஆம் தேதி தேமுதிக கட்சி அலுவலகத்தில் தேமுதிகவின் 14-வது ஆண்டு விழாவையொட்டி  கொடியை ஏற்றி வைத்து தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். மேலும், நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இதன் காரணமாக  அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது.

ஏற்கனவே உடல்நலம் பாதிக்கப்பட்டு, பேச முடியாமல் தவித்து வரும் விஜயகாந்த்துக்கு மேலும் உடல்நிலை பாதிக்கப்பட்டதால், அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டது. இது தேமுதிக தொண்டர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. விஜயகாந்துக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் நேற்று இரவு தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், விஜயகாந்த் தொடர்பாக தேமுக தலைமை அறிக்கை வெளியிட்டது. அதில்,  “விஜயகாந்த் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக மியாட் மருத்துவமனைக்குச் செல்வது வழக்கம். அந்த வகையில் சென்றபோது, அவருக்கு லேசான கொரோனா அறிகுறி இருப்பது தென்பட்டது. அது உடனடியாக சரிசெய்யப்பட்டது. தற்போது விஜயகாந்த் நலமுடன் உள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து, மியாட் மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,  விஜயகாந்த்துக்கு நடத்தப்பட்ட கொரோனா சோதனையில், கடந்த 22ந்தேதி  அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீராக உள்ளது. விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்று தெரிவித்து உள்ளது.

விஜயகாந்த் ரெகுலர் செக்கப்புக்காக மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தேமுதிக தலைமை  கூறியுள்ள நிலையில், மருத்துவமனை நிர்வாகமோ, விஜயகாந்த்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்து உள்ளது.

தமிழக துணைமுதல்வர்ஓ.பன்னீர் செல்வமும், விஜயகாந்த் கொரோனா தொற்றில் இருந்து விரைவில்  குணமடைந்து வர வாழ்த்துவதாக தெரிவித்து உள்ளார்.

இந்த நிலையில், தேமுதிக தலைமை, விஜயகாந்த் ரெகுலர் செக்கப்புக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளதாக பொய் கூறியுள்ளது.  இந்த விஷயத்தில்,  தேமுதிக தலைமையும், மியாட் மருத்துவமனை நிர்வாகமும் மாறுபட்ட தகவல்களை வெளியிட்டிருப்பது, தேமுக தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.