அப்பல்லோவில் என்ன நடக்கிறது..! உண்மையை மறைக்கிறாரா சசிகலா?

அப்பல்லோவில் என்ன நடக்கிறது..! உண்மையை மறைக்கிறாரா சசிகலா?

நெட்டிசன்:

ப்பல்லோ மருத்துவமனையில் இரண்டாவது தளத்தில் அறை எண் 2008-ல் கடந்த 10 நாட்களாக எந்த தொடர்பும் இல்லாமல் இருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. முதல்வரைச் சந்திக்க இதுவரை யாருக்கும் அனுமதி இல்லை. முதல்வரைச் சந்திக்க தடுக்கும் சக்தியாக எல்லோருமே கைநீட்டிக் காட்டுவது சசிகலாவைதான். சசிகலா சொல்வதை மட்டுமே அப்பல்லோ டாக்டர்களும், தலைமைச் செயலாளரும், காவல்துறை டிஜிபியும் செய்கிறார்கள். சசிகலாவை தாண்டி எந்த முடிவையும் எடுக்கும் அதிகாரம் தமிழகத்தில் தற்போது யாருக்கும் இல்லை. அமைச்சர்களும், அதிகாரிகளும் ஜெயலலிதாவுக்கு பயந்ததைவிட இப்போது சசிகலாவுக்கு அதிகம் பயப்படுகிறார்கள்.

apploos

எப்போதும் சசிகலாவுக்கு அதிமுகவில் செல்வாக்கு இருந்தாலும் இப்போது அவர் இல்லாமல் அப்பல்லோவில் ஒரு அணுவும் அசைவதில்லை. இப்படி ஒரு தவிர்க்கவே முடியாத சக்தியாக சசிகலா மாறியது எப்படி?

ஜெயலலிதாவுக்கு சசி. கட்சிக்காரர்களுக்கு சின்னம்மா. அதிகாரிகளுக்கு சின்ன மேடம். கட்சியிலும் சரி… ஆட்சியிலும் சரி… சசிகலாவின் கவனத்துக்குப் போகாமல் எந்த விஷயமும் ஜெயலலிதா பார்வைக்குப் போய்விட முடியாது. ஒரே நாளில் வந்துவிடவில்லை, இந்த நெருக்கமும் அதிகாரமும். இதற்காக சசிகலா கொடுத்திருக்கும் விலை 34 வருடங்கள்.

திருத்துறைப்பூண்டி விவேகானந்தன் – கிருஷ்ணவேணி தம்பதிகளுக்கு சுந்தரவதனன், விநோதகன், ஜெயராமன், வனிதாமணி, சசிகலா, திவாகரன் என்று ஆறு வாரிசுகள். ஐந்தாவது வாரிசுதான் சசிகலா. பத்தாம் வகுப்பு வரை மட்டுமே சசிகலா படித்தார். தஞ்சாவூர் பக்கமுள்ள விளார் என்ற ஊரைச் சேர்ந்த நடராஜனுக்கு சசிகலாவைத் திருமணம் செய்து கொடுத்தார்கள். திமுக தலைவர் கருணாநிதி தலைமையில்தான் சசிகலா – நடராஜன் திருமணம் நடந்தது. நடராஜன், தென்னாற்காடு மாவட்டத்தில் மக்கள் தொடர்பு அலுவலராக இருந்தார்.

jayalalitha-gives-sasikala-a-yellow-rose-419x338

சென்னைக்கு அவர் மாற்றலாகி வந்தபோது, மனைவிக்கு ‘வினோத் வீடியோ விஷன்’ என்ற கடை வைத்துக் கொடுத்தார். அந்தநேரத்தில்தான் அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக ஜெயலலிதா அறிவிக்கப்பட்டார். தமிழகம் முழுக்க ஜெயலலிதா டூர் கிளம்ப, அவரது டூர் புரோகிராமை வீடியோ எடுக்கும் வேலையை வினோத் வீடியோ விஷனுக்கு வாங்கினார் நடராஜன். அப்படி எடுக்கப்பட்ட வீடியோ கேசட்டை கொடுப்பதற்குத்தான் முதன்முதலில் ‘வேதா இல்லம்’ என்ற போயஸ் கார்டன் வீட்டுக்குள் நுழைகிறார் சசிகலா. நட்பு கேசட்டில்தான் தொடங்குகிறது.

சில மாதங்களுக்குப் பிறகு, மருத்துவ சிகிச்சைக்காக பெங்களூரு போகிறார் ஜெயலலிதா. அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் அவர் சிசிச்சை பெற்றுவந்த சமயத்தில் ஜெயலலிதாவைப் பார்க்க பெங்களூரு போகிறார் சசிகலா. நட்பு இறுக்கமாகிறது. ஜெயலலிதா வீட்டுக்கு அடிக்கடி போக வர ஆரம்பிக்கிறார். எம்.ஜி.ஆர். இறந்த சமயத்தில், ஜெயலலிதாவை இறுதி ஊர்வல வாகனத்தில் ஏற்றாமல் இறக்கிவிட்டு அவமானப்படுத்துகிறார்கள். கதறியழும் ஜெயலலிதாவுக்கு ஆறுதலாக இருந்தது சசிகலாதான்!

1991ஆம் ஆண்டு முதல்வராக சட்டமன்றத்துக்குள் நுழைகிறார் ஜெயலலிதா. உடன் சசிகலாவும் வருகிறார். அப்போதுதான் சசிகலாவின் முக்கியத்துவத்தை கட்சிக்காரர்களும், அதிகாரிகளும் உணர ஆரம்பிக்கிறார்கள். சசிகலா சின்னம்மா, சின்ன மேடம் ஆனதெல்லாம் அப்போதுதான். சசிகலாவின் அக்காள் மகன் சுதாகரனை வளர்ப்பு மகனாகத் தத்தெடுக்கிறார் ஜெயலலிதா. இந்தியாவையே மிரட்டும் அளவுக்கு ஆடம்பரமாகத் திருமணம் நடக்கிறது.

அந்த வழக்குதான் ஜெயலலிதாவுக்கு இன்றுவரை தலைவலியாகத் தொடர்கிறது. சசிகலாவின் உறவினர்கள் ஆதிக்கம் கட்சியிலும், ஆட்சியிலும் தலைவிரித்தாடுகிறது. அந்த, ஐந்து வருட ஆட்சி முடியும்போது ஜெயலலிதா, மக்களிடம் சம்பாதித்திருந்தது வெறுப்பு மட்டும்தான்! ‘இனி ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் ஆண்டவனால்கூட தமிழ்நாட்டைக் காப்பாற்ற முடியாது’ என ரஜினி வாயைத் திறந்ததும் அந்த நேரத்தில்தான்.

கடுமையான தோல்விக்குப் பிறகுதான் ஜெயலலிதாவுக்கு ஞானோதயம் வந்தது. ’தோல்விக்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்? எனக்குக் கடிதம் எழுதுங்கள்!’ என்று அதிமுகவினரிடம் கேட்டார் ஜெயலலிதா. வந்த கடிதங்கள் அத்தனையிலும் சொன்ன ஒரே காரணம்… சசிகலா. அவர்களின் காரணத்தை ஏற்று, சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கினார். கார்டனை விட்டு அனுப்பினார். ஒரே வருடத்தில் மீண்டும் சேர்த்துக் கொண்டார். சசிகலா இல்லாமல் ஜெயலலிதா இருக்கமாட்டார் என்பதையே அந்த நிகழ்வு காட்டியது.

jaya-sasi

சசிகலாவின் உறவினர்கள் தமிழகம் முழுக்க கட்சிக்குள் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தார்கள். கோவைக்கு ராவணன், திருச்சிக்கு கலியபெருமாள் என்று ஊருக்கு ஒரு உறவுகள் முளைத்தன. கட்சிக்குள் யாரை நீக்குவது? யாரைச் சேர்ப்பது? என்பதுவரை, சசிகலாவின் அனுமதி இல்லாமல் எதுவும் நடக்காது என்ற நிலைக்கு அதிமுக மாறியது. மாற்றினார் சசிகலா. 2011இல் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம் பகிரங்கமாகவே தெரிய ஆரம்பித்தது. மக்கள் முகம் சுளிக்க ஆரம்பித்தார்கள். கட்சிக்காரர்கள் கதற ஆரம்பித்தார்கள். அந்த சமயத்தில், டி.ஜி.பி-யாக இருந்த ராமானுஜம்தான் இந்த விஷயத்தை ஜெயலலிதாவிடம் நேரடியாகவே சொன்னார். உடனடியாக மீண்டும், கார்டனை விட்டு சசிகலாவை வெளியேற்றினார் ஜெயலலிதா. சசிகலாவின் சொந்தபந்தங்களை எல்லாம் விரட்டினார். 2012, மார்ச் மாதம் முதன்முறையாக சசிகலா வாய்திறந்தார்.

‘’கடந்த மூன்று மாத காலமாக பலதரப்பட்ட பத்திரிகைகளில் என்னைப் பற்றிய பலவிதமான செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால் இந்த அறிக்கையை வெளியிட வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த 1984ஆம் ஆண்டில், முதன்முதலாக அக்காவை (முதல்வர் ஜெயலலிதா) நான் சந்தித்தேன். அதன்பின்னர், எங்களுக்குள் நட்பு வளர்ந்தது. அவரும் என்னை தனது தங்கையாக ஏற்றுக்கொண்டார்.

1988ஆம் ஆண்டிலிருந்து அக்காவின் போயஸ் கார்டன் இல்லத்திலேயே அவருடன் வசித்து வந்தேன். அதிமுகவின் பொதுச் செயலாளராகவும், தமிழ்நாட்டின் முதல்வராகவும் இரவு-பகல் என பாராமல் கடுமையாக உழைத்து வந்த அக்காவின் பணிச்சுமையை ஓரளவுக்காவது குறைக்கும்வகையில் அவருக்கு உதவியாக இருந்து, என்னால் இயன்ற பணிகளைச் செய்யவேண்டும் என்றுதான் விரும்பினேனே தவிர, வேறு எந்தவிதமான எண்ணங்களும் எனக்கில்லை.

என்னுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சிலர், நான் அக்காவுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்ததை அடிப்படையாக வைத்து, எனது பெயரை தவறாகப் பயன்படுத்தி சில விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டனர் என்பதையும், அதனால் கட்சிக்கு பாதிப்புகள் ஏற்படுத்தப்பட்டன என்பதையும், அவர்களின் தவறான நடவடிக்கைகளால் பல குழப்பங்கள் உண்டாக்கப்பட்டன என்பது தெரிந்து நான் அதிர்ந்துவிட்டேன். இவையெல்லாம் எனக்குத் தெரியாமல் நடந்தவை என்பதுதான் உண்மை. சந்தித்த நாள் முதல் இன்றுவரை, அக்கா நன்றாக இருக்கவேண்டும் என்றுதான் ஒவ்வொரு விநாடியும் நான் நினைத்திருக்கிறேனே தவிர, கனவிலும் நான் அக்காவுக்குத் துரோகம் நினைத்ததில்லை.

என்னுடைய உறவினர்கள், நண்பர்கள் என்று சொல்லிக்கொண்டு அக்காவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் செய்தது, மன்னிக்க முடியாத துரோகம். அக்காவுக்கு துரோகம் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் எனக்கும் வேண்டாதவர்கள்தான். இனிமேல்,அவர்களுடன் எனக்கு எவ்வித ஒட்டுமில்லை, உறவுமில்லை. எனக்கு அரசியல் ஆசை எப்போதும் இல்லை. அக்காவுக்கு உண்மையான தங்கையாக இருக்கவே நான் விரும்புகிறேன். என் வாழ்க்கையை ஏற்கெனவே அக்காவுக்கு அர்ப்பணித்துவிட்டேன்” என்று வந்தது அந்த அறிக்கை.

அடுத்த ஒரே வாரத்தில் மீண்டும் கார்டனுக்குள் சேர்த்துக் கொள்ளப்பட்டார் சசிகலா. சசிகலாவுக்கு எதிராகப் பேசியவர்கள் எல்லோரும் பதற ஆரம்பித்தார்கள். மீண்டும், சசிகலாவின் கை கார்டனிலும் கட்சியிலும் ஓங்க ஆரம்பித்தது.

apollo-hospitals-480

சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையில் தீர்ப்பு வந்தபோது, ஜெயலலிதாவோடு சேர்ந்து சசிகலாவுக்கும் தண்டனை வழங்கியது நீதிமன்றம். பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜெயலலிதாவுக்கு இருந்த ஒரே ஆறுதல் சசிகலா மட்டும்தான். இப்படித்தான் ஜெயலலி்தாவுக்கு எல்லாமுமாக மாறிப்போனார் சசிகலா.

சங்க காலத்தில் தொடங்கி சசிகுமார் – சமுத்திரகனி காலம் வரை நட்புக்கு நிறைய உதாரணங்கள் இருக்கிறது. ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்குமான நட்பு என்பது அவர்கள் இருவர் சம்பந்தப்பட்டது. அதை அவர்கள் யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், ஜெயலலிதா என்பவர் சசிகலாவுக்கு தோழி மட்டும் அல்ல. அவர் தமிழ்நாட்டின் சொத்து.

தமிழக மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்த முதல்வர். அவருக்கு என்னாச்சு என்பதை சொல்லாமல் மறைக்க சசிகலா யார் ..?

-வாட்ஸ்அப் பதிவு