சென்னை: புதுச்சேரி திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் நான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டு  இருப்பதாக, புதுச்சேரி மாநில திமுக பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் விளக்கம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநில திமுக பொறுப்பாளராக கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனை நியமனம் செய்துள்ளார். இதைத்தொடர்ந்து, புதுச்சேரி காரைக்காலில்,  திமுக நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ஜெகத்ரட்சகன்,  சுமார் 10 லட்சம் மக்கள் உள்ள புதுச்சேரி மாநிலத்தில் எந்தவித வளர்ச்சியும் இல்லை என்று கடுமையாக சாடியதுடன், தனது எம்.பி. தொகுதியை விட சிறியதான புதுச்சேரியில், பல்வேறு தொழிற்சாலைகளை கொண்டு வந்திருந்தால் 1 லட்சம் பேருக்கு வேலை கொடுத்திருக்கலாமே என்று கூறினார். மேலும், புதுச்சேரி மாநிலத்தில் 30 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்றும் கூறினார்.

மாநிலத்தின் மொத்த தொகுதிகளே 30தான்  என்ற நிலையில்,  30 தொகுதிகளிலும் திமுக வெற்றிபெற வேண்டும் என ஜெகத்ரட்சகன் கூறியது சலசலப்பை ஏற்படுத்தியது. சமீப காலமாக காங்கிரஸ் நடத்தும் போராட்டத்தில் திமுக கலந்துகொள்ளாத நிலையில், அங்கு திமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டு வந்தது.

இந்த நிலையில்,  தான் பேசிய கருத்து,  தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என ஜெகத்ரட்சகன் விளக்கம் அளித்துள்ளார்.  நாங்கள் என்றால் கூட்டணியுடன் சேர்ந்து வெற்றி பெற்று, திமுக தலைமையில் ஆட்சி அமைப்போம் என்று தான் அர்த்தம். யாருடன் கூட்டணி, எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்பது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார் என்று தெரிவித்ததுடன்,

புதுச்சேரியில் திமுக தலைமையில் ஏற்கெனவே 4 முறை ஆட்சி அமைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.