மராட்டியத்தில் அரசமைக்கும் விவகாரம் – நடப்பது என்ன?

சட்டமன்ற தேர்தல் முடிந்த மற்றொரு மாநிலமான ஹரியானாவில் எப்போதோ புதிய அரசு அமைந்துவிட்ட நிலையில், மராட்டியத்தில் மட்டும் இன்னும் தேக்கநிலை உடையும் அறிகுறி தெரியவில்லை.

பாரதீய ஜனதாவின் கூட்டணிக் கட்சியான சிவசேனை முகாமில், பல்வேறான நடவடிக்கைகள் நிகழும் நிலையில், பாரதீய ஜனதாவோ அமைதி காக்கலாம் என்ற முடிவிலிருந்து இன்னும் பின்வாங்கவில்லை.

மேலும், இதுதொடர்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் செயல்பாடுகளும் நிலையான தன்மையைக் கொண்டதாக இல்லாமல், குழப்பம் கொண்டதாகவே உள்ளது.

முதலில், சிவசேனா போன்ற ஒரு கட்சிக்கு ஆதரவிலலை என்றவர், பின்னர், பாரதீய ஜனதாவிடம், சிவசேனா சமப்பங்கு கேட்பதில் தவறில்லை என்றார்.

தற்போது, அவர் மராட்டியத்தில் ஆட்சியமைப்பது தொடர்பாக, வரும் திங்களன்று சோனியா காந்தியை சந்திக்கவுள்ளதாக அவரது கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், காங்கிரசை சேர்ந்த மராட்டிய மாநிலத்தின் முஸ்லீம் மக்களவை உறுப்பினர் ஒருவர், சிவசேனா மராட்டியத்தில் சிவசேனா ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சி ஆதரவளிக்கலாம் என்று கருத்துக் கூறியுள்ளதும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

மராட்டியத்தில் அரசு அமைக்கப்படவில்லை என்றால், அங்கே ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படும் என்று பாரதீய ஜனதாவின் சுதிர் முங்கன்திவார் பேசியதை, சிவசேனாவின் பத்திரிகையான சாம்னா, கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.

காங்கிரசும் தேசியவாத காங்கிரசும், அவர்களிலிருந்து மிகவும் முரண்பட்ட ஒரு கட்சியான சிவசேனாவுக்கு ஆதரவளிப்பது என்பதெல்லாம் கதைக்கு உதவாத காரியம். அவர்களின் நோக்கம் என்பது பாரதீய ஜனதாவை இக்கட்டில் தள்ளுவதாக மட்டுமே இருக்க முடியும். இயல்பான கூட்டாளிகளான சிவசனோ – பாரதீய ஜனதா இடையிலான பிரச்சினை, எந்த வழியிலேனும் முடிவுக்கு கொண்டுவரப்படும் என்று தெரிவிக்கின்றனர் அரசியல் நோக்கர்கள் சிலர்.