கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் இன்னும் 5 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு தேர்தல் களம் அனல்பறக்கிறது. ஆளும் கட்சியான, மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து, பாஜகவுக்கு தாவும் எம்எல்ஏக்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளின் எண்ணிக்கை நாளுக்க நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், மேற்குவங்கத்தில் 2 நாள் முகாமிட்டுள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று  மிட்னாப்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். இந்த நிகழ்வின்போது,   அவரது முன்னிலையில், திரிணமுல் காங்கிரசில் இருந்து விலகிய, அக்கட்சி மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி உள்ளிட்ட 10 எம்.எல்.ஏ.,க்கள், மம்தா கட்சியில் இருந்து பா.ஜ.,வில் இணைந்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நிகழ்ச்சியில், மம்தா கட்சி எம்எல்ஏக்களை  வரவேற்று பேசிய அமித்ஷா, 2021 சட்டசபை தேர்தலில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் பா.ஜ., வெற்றி பெறும் எனவும், தேர்தல் நெருங்கும் சமயத்தில் திரிணமுல் காங்கிரசில் மம்தா மட்டும் தனித்துவிடப்படுவார் எனவும் தெரிவித்துள்ளார்.
மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு கடுமையான சவால்களை கொடுத்துவரும் மம்தா பானர்ஜி, பாஜக கொண்டு வரும் மக்கள் விரோத சட்டங்களை கடுமையாக எதிர்த்துவருகிறார். தற்போது வேளாண் சட்டங்களையும் கடுமையாக விமர்சித்து வருவதுடன், மேற்கு வங்கத்தில் பணியாற்றி வரும் 3 ஐபிஎஸ் அதிகாரிகளை மத்தியஅரசு பணிக்கு மாற்றிய உத்தரவையும் ஏற்க மறுத்து வருகிறார். இதனால், மம்தாவுக்கும், பாஜகவும் இடையேயான மோதல், கவுரவ பிரச்சினையாக உருவெடுத்து உள்ளது.
இதையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை உருக்குலைக்கும் நடவடிக்கையில் பாஜக அரசு  நடவடிக்கை எடுத்து வருகிறது.  திரிணாமுல் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள், எம்எல்ஏக்கள் என முக்கியமானவர்களை, பாஜகவுக்கு இழுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. சமீப காலமாக இந்த அரசியல் பேரம் நடவடிக்கைகளில் வெற்றியையும் பெற்றுள்ளது. இதன் காரணமாக, மாநிலத்தில் ஆட்சியை பிடித்தே தீருவோம் என தீவிரமாக பணியாற்றி வருகிறது.
இதன் எதிரொலியாக இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷா மேற்குவங்க மாநிலத்திற்கு சென்றுள்ளார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இருப்பதாக கூறி 2 முகாமிட்டு, தேர்தல் உத்திகளை வகுத்து வருகிறார். கொல்கத்தா சென்ற அமித்ஷா,  அங்குள்ள ராமகிருஷ்ணா ஆசிரமத்தில் வழிபாடு நடத்தினார். பின்னர், சுவாமி விவேகானந்தர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து, சுதந்திர போராட்ட வீரர் குடிராம் போஸன் இல்லத்திற்கு சென்று மரியாதை செலுத்திய அவர், அவரின் குடும்ப உறுப்பினர்களை சந்தித்து பேசினார்.
பின்னர், மிட்னாப்பூர் மாவட்டத்தில் உள்ள விவசாயி ஒருவரின் வீட்டில், அமித்ஷா, பா.ஜ., பொது செயலர் கைலாஷ் விஜயவர்கியா மற்றும் மாநில பாஜ., தலைவர் திலீப் கோஷ் மதிய உணவை சாப்பிட்டனர். அதைத்தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்,   சுவேந்து அதிகாரி, தபாசி மொண்டல், அசோகி திண்டா, சுதிப் முகர்ஜி, சாய்காட் பஞ்சா, ஷில்பத்ரா தத்தா, திபாலி பிஸ்வாஸ், சுக்ரா முண்டா, ஷியாமபதா முகர்ஜி, பிஸ்வஜித் குண்டு, பனஸ்ரீ மைடி உள்ளிட்ட 10 எம்.எல்.ஏ.,க்கள் ஒரு எம்.பி., மற்றும் முன்னாள் எம்.பி., ஒருவர் பா.ஜ.,வில் இணைந்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா,  மம்தா தலைமையில் தவறான ஆட்சி நடக்கிறது. மக்கள், மம்தாவுக்கு எதிராக உள்ளனர். தேர்தல் நெருங்கும் சமயத்தில் திரிணமுல் காங்கிரசில் மம்தா தனித்து விடப்படுவார். மக்கள் நிலையான ஆட்சிக்கு, பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
முன்னதாக, முன்னாள் அமைச்சருமான சுவேந்து அதிகாரி கடந்த சில நாட்களுக்கு முன்னர் கட்சியில் இருந்து விலகுவதாக, மம்தாவுக்கு கடிதம் அனுப்பினார்.  அதுபோல இன்று அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்த எம்எல்ஏக்களும், தங்களது ராஜினாமா கடிதங்களை மம்தாவுக்கு அனுப்பி உள்ளனர்.
மம்தாவின் கடுமையான போக்கு, கட்சிக்குள்ளும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், பலர், அங்கிருந்து விலக பாஜகவில் ஐக்கியமாகி வருவது, மம்தாவுக்கு பின்னடையை ஏற்படுத்தி உள்ளது.