உயில் என்பது என்ன ? விழிப்புணர்வு பதிவு!

probate

உயில் என்பது என்ன ? – நெட்டிசன்

ஒரு மனிதர் – தனது வாழ் நாளுக்கு பின் தனது சொத்து மற்றும் வங்கி கணக்கில் உள்ள பணம் உள்ளிட்ட அனைத்தும் யார் யாருக்கு தர வேண்டும் என விரும்புகிறாரோ – அதனை எழுதி வைப்பது தான் உயில்.

உயிருடன் இருக்கும் போது எழுதப்படும் இந்த தனி மனிதரின் விருப்பம் – அவரது மறைவுக்கு பின்தான் அமல் படுத்தப்படும்.

சுய சம்பாத்தியத்தில் வந்தவை மட்டும் தான் உயில் எழுத முடியுமா ? சுய சம்பாத்தியத்தில் வந்தவை மற்றும் தனது பெற்றோர் மூலம் – சட்டப்படி ஒருவருக்கு வந்த சொத்துக்கள் இவற்றை உயில் மூலம் மாற்றம் செய்ய முடியும்.

வயதானவர்கள் மட்டும் தான் உயில் எழுதுவது அவசியமா ?

அப்படி இல்லை. மரணம் எப்போது வேண்டுமானாலும், எந்த வடிவிலும் ஒருவருக்கு வரக்கூடும் என்பதால் – மத்திய வயதில் இருப்போரும் கூட உயில் எழுதி வைப்பது நல்லது.

உயில் எழுதாத பட்சத்தில் – உங்கள் உறவினர்களில் – நீங்கள் விரும்பாத சிலருக்கு கூட உங்கள் சொத்தில் ஒரு பகுதி செல்லக்கூடும்.

மாறாக நீங்கள் சம்பாதித்த சொத்தை நீங்கள் விரும்பினால் – ஒரே ஒரு நபருக்கு கூட செல்லுமாறு உயில் மூலம் செய்யலாம்.

மேலும் உங்கள் சொத்தில் ஒரு பங்கை உங்கள் காலத்துக்கு பின் Charity – க்கு செல்ல வேண்டுமென நினைத்தால் – அது உயில் எழுதி வைத்தால் தான் சாத்தியமாகும். இல்லாவிடில் வாரிசு தாரர்கள் மட்டுமே சொத்தை பிரித்து கொள்வர்.

ஒரு உயில் எப்படி எழுதப்பட வேண்டும் ? அதனை ரிஜிஸ்தர் செய்வது எப்படி ?

உயில் ஒரு மனிதனின் விருப்பம் என்ற அளவில் – எப்படி / எந்த format -ல் வேண்டுமானாலும் எழுதப்படலாம்.

உயிலை ரிஜிஸ்தர் செய்வது சட்டப்படி கட்டாயம் இல்லை. ஆயினும் – அதன் நம்பகத்தன்மையை சிலர் சந்தேகிக்கலாம் என்ற அளவில் – ரிஜிஸ்தர் செய்வது நல்லது.

தனது உயிலை ஒருவர் எழுதி முடித்து விட்டு தனது கையொப்பம் இட்டபின் – கட்டாயம் இருவர் சாட்சி கையெழுத்திட வேண்டும்.

இப்படி சாட்சி கையெழுத்திடுவோர் – தங்கள் முன் உயிலை எழுதியவர் கையொப்பம் இட்டார் என்பதற்கு மட்டுமே கையெழுத்து இடுகிறார்கள்.

உயிலை முழுவதும் அவர்கள் வாசிக்க வேண்டுமென்று அவசியம் இல்லை. இதன் பின் உயில் சப் ரிஜிஸ்தர் அலுவலகத்தில் ரிஜிஸ்தர் செய்யலாம்.

உயிலை ரிஜிஸ்தர் செய்ய மிக மிக குறைந்த கட்டணமே (அதிக பட்சம் ரூ. 500 ) வாங்கப்படுகிறது.

நாம் ஒரு முறை எழுதிய உயிலை மாற்றி எழுத முடியுமா ? ஒருவர் பல உயில் எழுதினால் – எது எடுத்து கொள்ளப்படும் ?

ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் உயிலை மாற்றி எழுதலாம். எந்த உயில் கடைசியாக ஒருவரால் எழுதப்பட்டதோ, அதுவே அவரின் இறுதி உயிலாக எடுத்து கொள்ளப்படும்.

உயிலை முழுவதும் மாற்றி எழுதாமல் சில பகுதிகளை மட்டும் மாற்ற முடியுமா ?

முடியும். குறிப்பாக ஒருவர் உயில் எழுதிய பின் புதிதாக வேறு சொத்துகள் வாங்கியிருக்கலாம். அல்லது ஏற்கனவே எழுதிய ஒரு சொத்தை – இன்னொருவருக்கு மாற்றி எழுதலாம்.

இந்நேரங்களில் உயிலின் ஒரு பகுதியில் மட்டும் மாற்றம் செய்யப்படும். அல்லது புதிதாக உள்ள சொத்து யாருக்கு சேரவேண்டும் என எழுதப்படலாம். இதற்கு “Codicil ” என்று பெயர்.

உயில் மற்றும் Codicil இரண்டும் சேர்ந்து ஒருவரின் உயிலாக கொள்ளப்படும் ஒருவருக்கு உயில் மூலம் எழுதி வைத்த சொத்தை, உயில் எழுதியவர் பின்னர் விற்க முடியுமா ?

உயில் என்பது ஓருவரின் இறப்புக்கு பின் தான் நடைமுறைக்கு வருகிறது. எனவே – அவர் இறக்கும் வரை அந்த சொத்தை அவர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அதனை அவர் தாரளாமாக பிறருக்கு விற்கலாம். அல்லது வேறு யாருக்கேனும் கூட மாற்றி எழுதலாம்.

இஸ்லாமியர்கள் தங்கள் சொத்து முழுமையும் உயில் மூலம் எழுத முடியுமா ?

முடியாது. ஒரு இஸ்லாமியர் தனது சொத்தில் மூன்றில் ஒரு பங்கை மட்டுமே உயில் மூலம் எழுத முடியும். மீதமுள்ள 2/3 பங்கு – அவரது வாரிசு தாரகளுக்கு இஸ்லாமிய சட்டத்தின் படி தான் சென்று சேரும்.

உயிலை நடைமுறைப்படுத்த கோர்ட் அனுமதி பெறவேண்டுமா ?

உயிலில் உள்ள விஷயங்களை கோர்ட் ஒரு முறை அங்கீகரிக்கும் வழக்கம் இந்தியாவில் மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னையில் உள்ள சொத்துக்களுக்கு மட்டும் அவசியமாகும்.

மேலும்,  இந்த 3 நகரங்களிலும் இருந்தபடி ஒருவர் உயில் எழுதினர் எனில் – அவர் உயில் மூலம் எழுதும் சொத்து வேறு ஊரில் இருந்தாலும் கூட கோர்ட் அப்ரூவல் பெறுவது அவசியமாகிறது.

இந்த நடைமுறையை ப்ரொபேட் என்று அழைப்பார்கள். ப்ரொபேட் தேவைப்படும் நேரங்களில் சம்பந்தப்பட்டவர்கள் கோர்ட்டுக்கு விண்ணப்பித்து ப்ரொபேட் பெற்றபின் தான் சொத்து – சட்டப்படி அவருக்கு வந்து சேரும்.

Executor மற்றும் Beneficiary என்பவர்கள் யார்?

தனது சொத்துக்களை உயில் மூலம் எழுதி வைக்கும் நபர் Testator எனப்படுவார். சொத்தில் யார் யாருக்கெல்லாம் உரிமை/ பங்கு உள்ளதாக அவர் குறிப்பிடுகிறாரோ அவர்கள் Beneficiary எனப்படுவர்.

ஒருவர் எழுதிய உயிலை அவரது மரணத்துக்கு பின் நிர்வகித்து அனைவருக்கும் உயிலில் உள்ளபடி சொத்துக்கள் சென்று சேரும்படி நடவடிக்கை எடுப்பவர் Executor என அழைக்கப்படுவார். ஒருவர் தனது உயிலிலேயே – Executor யார் என குறிப்பிடுவது மிகவும் நல்லது.

நாம் எழுதும் உயில் யாருக்கும் தெரியாமல் இருக்குமாறு பார்த்து கொள்ளும் வசதி உள்ளதா ?

ஆம்; அப்படியொரு வசதி இருக்கிறது. எந்த சப் ரிஜிஸ்தர் அலுவலகத்தில் உயிலை நாம் பதிவு செய்கிறோமோ, அங்கேயே குறிப்பிட்ட தொகை செலுத்தினால், சப் ரிஜிஸ்தர் அதனை பத்திரமாக பாதுகாப்பார். அவர் ரீசீப்ட்- டை நமது வாரிசு தாரர்களிடம் தந்து வைத்து விடலாம்.

நமது இறப்பிற்கு பின் அந்த ரீசீப்ட் மற்றும் நமது இறப்பிற்கான சான்று காட்டி – நமது வாரிசு தாரர்கள் நமது உயிலை பெற்று கொள்ளலாம்.

-Adv Rajendran Cm – வாட்ஸ்அப் பதிவு

Leave a Reply

Your email address will not be published.