Random image

ரஜினியின் அரசியல் திட்டம் என்ன?: டீட்டெய்ல் ஸ்டோரி

சிறப்புச் செய்திச ராஜரிஷி

‘போர் என்றால் தேர்தல் தான். போருக்கு சென்றால் ஜெயிக்கணும். அதுக்கு வீரம் மட்டும் போதாது. வியூகமும் வேண்டும்’ என்ற ரஜினியின் அதிரடியும், 31ம்தேதி (நாளை) தனது அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிப்பதாக தெரிவித்து இருப்பதும் தமிழக அரசியல் களத்தை சூடாக்கியுள்ளன.

ரசிகர்களைச் சந்தித்து நீண்டநாட்களாகிவிட்டது. அவர்களை சந்தித்து புகைப்படம் எடுக்க வேண்டும் என்பது கடந்த ஐந்து ஆண்டுகளாக ரஜினியின் சிந்தனையில் இருந்த விஷயம். உடல்நிலை பாதிப்பு, தொடர்ச்சியாக படப்பிடிப்பு என பல காரணங்களால் தள்ளிப்போன இந்த சந்திப்பு தற்போது இரண்டாம் கட்டமாக நடந்து முடியப்போகிறது.

1996ல் திமுக – தமாகா கூட்டணிக்கு ரஜினி ஆதரவு தெரிவித்ததன் மூலம் தனது ரசிகர்களை அரசியல் களத்தில் ரஜினியே இறக்கி விட்டார். அப்போது அவர்களுக்கு கிடைத்த ‘சகல’ வசதிகளும், சில நாட்களுக்கு மட்டுமே தொடர்ந்தன. அதன்பின், திமுக, தமாகாவினர் ரஜினி ரசிகர்களை ஒதுக்க, தலைவரை நேரடியாக களமிறக்கினால், பதவி, பணம் எல்லாம் நமக்கு நேரடியாக கிடைக்குமே என்ற எண்ணம் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகளுகு (ரசிகர்களுக்கு அல்ல) ஏற்பட்டது. அதன் பலனாக, படவெளியீடு, பிறந்தநாட்களில் அரசியல் கலந்த போஸ்டர்களை வெளியிட்டு தங்கள் ஆதங்கத்தை தீர்த்துக் கொண்டனர். மீடியாக்களும், விருப்பம்போல் ரஜினியின் அரசியல் பிரவேசம் தொடர்பான கட்டுரைகளை எழுதிக் குவித்தன. ரஜினி அந்த வசனத்தில் இவரைத் தாக்குகிறார், இந்த பாடல் வரிகள் இதனைச் சொல்கிறது, இந்த காட்சி இதற்காகத்தான் அமைக்கப்பட்டது என அடுத்தடுத்து ரஜினிக்கும், அரசியலுக்கும் மூன்று முடிச்சு போட்டன மீடியாக்கள். ரஜினி அட்டைப்படத்தில் இருந்தாலோ, போஸ்டரில் இருந்தாலோ புத்தகங்கள், நாளிதழ்கள் விற்றுத் தீர்த்து விடுகின்றன என்ற முகவர்களின் கருத்தும் இதற்கு காரணமாக இருக்கலாம்.

சரி. இப்போதைய சப்ஜெக்ட்டிற்கு வருவோம். தன்னால் அரசியல் களத்திற்கு அனுப்பப்பட்ட ரசிகர்கள், நற்பணிகள் செய்து, நல்ல பேர் வாங்குவதற்கு பதிலாக, பதவி, பந்தா, பணம் என்ற வலைக்குள் விழுந்து விட்டதை உணர்ந்த ரஜினி அதிர்ச்சி அடைந்தார். அந்த அதிர்ச்சியின் வெளிப்பாடுதான், ரசிகர் சந்திப்பின் போது, ‘பணம் சம்பாதிக்கணும்னு நினைக்கிறவங்க என்னை விட்டு போய்விடுங்கள் ‘ என்ற எச்சரிக்கை.

ரஜினியின் அரசியல் பிரவேசம் என்பது பல ஆண்டுகளாக திட்டமிடப்பட்டு கட்டமைக்கப்படவில்லை. தான் நேரடியாக அரசியலுக்கு வந்து நல்லது செய்ய வேண்டும் என்பது அவசியமில்லை. நம் மூலமாக, யாராவது ஒருவர் ஆட்சிக்கு வந்து மக்களுக்கு நல்லது செய்தால் போதுமானது என்ற எண்ணம் அவருக்கு உண்டு. கலைஞர், ஜெயலலிதா (1996க்குப் பின்) என்ற இரு ஆளுமைகளை அவர் பெரிதும் மதித்தார். ஆட்சியில் சில குறைபாடுகள் இருந்தாலும், அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை தன்னால் தொல்லை வரக்கூடாது என நினைத்தார். அதில் உறுதியாகவும் இருந்தார்.

ஜெயலலிதா மறைவு மற்றும் கலைஞரின் முதிர்வு ஆகிய இரு நிகழ்வுகளும் அவரை தனது எண்ணத்தில் இருந்து மாற வைத்தது. இரு திராவிடக் கட்சிகளும் வேண்டாம் என்ற எண்ணம் உள்ள அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், பத்திரிகையாளர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், தனது நண்பர்கள் என பலரிடமும் பேசும்போது, தமிழகத்திற்கு மாற்றுத்தலைமைக்கான தேவை உள்ளதை உணர்ந்தார். இந்த வெற்றிடத்தை நீங்கள் நிரப்ப முடியும் என்ற நம்பிக்கையை அவர்கள் கொடுத்தனர். அடுத்தடுத்த செயல்திட்டங்கள் தயாராகியது. திருச்சியில் மாநாடு நடத்தி தமிழருவி மணியன் ஆழம் பார்த்தார். ரசிகர் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடாகி, தற்போது அவை நிறைவ்டையும் நிலைக்கு வந்துள்ளன.

‘நீங்க எல்லாம் சொல்றது சரிதான். ஆனா…’ என்ற இடைவெளியை பெரும்பாலன முக்கிய பிரமுகர்களின் சந்திப்பில் தொடக்கத்தில் சொல்லியிருக்கிறார் ரஜினி. இந்த தயக்கத்தை உடைக்கும் வார்த்தைகள் எதிர்முனையில் இருந்து உடனடியாக வந்துள்ளன. இதனால் ஏற்பட்ட நம்பிக்கை, குறிப்பிட்ட முக்கியப் பிரமுகர்களை இரண்டாம் முறையாக சந்திக்கும் போது, அரசியலில் ஈடுபடுவதற்கான தயக்கத்தை உடைத்து ரஜினியை பேச வைத்துள்ளது.

ஒவ்வொரு கட்சியின் பலம், அரசுகளின் செயல்பாடு, அதிகாரிகளின் எண்ணம், பொதுமக்களுக்கு எதை விரும்புகின்றன்றனர், அவர்கள் விரும்பாத விஷயங்கள் எவை என்பதெல்லாம் கேட்டு தெரிந்த போதுதான், ‘சிஷ்டம்’ எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை ரஜினியால் அறிய முடிந்தது. அதன் வெளிப்பாடு தான் ‘சிஷ்டம்’ சரியில்லை என்ற ரஜினியின் பேச்சு.

பாஜகவோடு ரஜினியை இணைக்கவும் பல முயற்சிகள் நடந்துள்ளன. அதுகுறித்தும் தன்னை சந்தித்தவர்களிடம் கருத்துக் கேட்க, உங்கள் ரசிகர்கள் மதம்,மொழி, ஜாதி கடந்தவர்கள். உங்களை பாஜக என்ற வட்டத்தில் அடைப்பதை அவர்கள் விரும்ப மாட்டார்கள் என்று பெரும்பாலானவர்கள் சொன்னதால், அந்த ஆப்ஷனை கைவிட்டார் ரஜினி.

எல்லா பிரச்சினைகளையும் கேட்டறிந்தது முதல் சுற்று என்றால், தீர்வு என்ன என்பது இரண்டாம் சுற்று. இதில் நதிநீர் பிரச்சினை தொடங்கி ரேஷன்கடை வரை எல்லா பிரச்சினைகளுக்குமான தீர்வுகள் இப்போது ரஜினியின் கையில் உள்ளது. முன்னாள் இந்நாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், பல்துறை வல்லுநர்கள் என பலரின் பங்களிப்பு இதில் உள்ளது. நல்லது நடக்க வேண்டும் என்றால் அமைதி காக்க வேண்டும் என்ற உடன்படிக்கையோடு இவர்கள் காத்திருக்கின்றனர்.

ஒருமுறை பிரதமர் மோடி பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்துகிறார் என்று தன்னை சந்தித்த முக்கிய பிரமுகர் கூற, ‘மோடி என்ன மோடி… அவரை விட சிறப்பா செயல்பட முடியும். எல்லா பிரச்சினைக்கும் தீர்வு நம்ம கிட்ட இருக்கு. ஆனா, அதைச்செயல்படுத்த வாய்ப்பும், அதற்கேற்ற சூழலும் வரணும் அவ்வளவுதான்’ என்று அதிரடியாக ரஜினி சொன்னது இன்றுவரை முக்கிய பிரமுகர்கள் மத்தியில் உலாவி வருகிறது.

போர் என்றால் தமிழக சட்டசபை பொதுத்தேர்தல்தான். அது எப்போது வரும் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால், பாஜக மனது வைத்தால், அவர்கள் நினைக்கும் நேரத்தில் போர் நடக்கச் செய்ய முடியும். திராவிடக் கட்சிகளை விரட்ட நம்மால் முடியாது, அதனை சாத்தியப்படுத்தும் வல்லமை உள்ள ரஜினியை நம்மால் வளைக்க முடியாது என்ற நிலையில், அவருக்கு மறைமுக ஆதரவு தரும் முடிவை மத்திய பாஜக தற்போது எடுத்துள்ளது. அதனால், போர் மேகங்களை எப்போது வேண்டுமானாலும் சூழ வைக்கும் வல்லமை தற்போது ரஜினிக்கு வந்து விட்டது.

போரில் ரஜினி எதிர்கொள்ளப் போகிறவர் யார் என்ற கேள்வி தற்போது முக்கியமானது. ஆர்.கே.நகர் தேர்தலில் தினகரன் எடுத்த விஷ்வரூபம், ஆளுங்கட்சிக்கு ஏற்பட்ட தோல்வி, டெபாசிட்டை பறிகொடுத்த திமுக என தமிழக அரசியல் புதிய பரிமாணத்தில் நிற்கிறது. ஓட்டுவங்கி அரசியல், தேர்தல் சின்னம் போன்ற கணக்கீடுகள் வ்ரும் பொதுத்தேர்தலில் எடுபடாது என்ற பொதுக்கருத்து ஏற்பட்டுள்ளது. ஆட்சி பறிபோகுமானால், தினகரன் பின்னால் அதிமுக நிற்கும் அல்லது இரண்டாக பிரிந்து வலுவிழந்து போகும். அமைப்பு ரீதியாக பலம் வாய்ந்த கட்சி என்றாலும், திமுகவின் மீது நம்பிக்கை அதிகரிப்பதற்கு பதில், சலிப்பே தற்போது அதிகரித்துள்ளது. ஸ்டாலினின் செயல்பாடுகள் இளம்தலைமுறையை எந்த வகையிலும் ஈர்க்கவில்லை. கட்சியின் வாக்குகளையே ஆர்கே நகரில் காசு சாப்பிட்டு விட்ட நிலையில், வலுவிழந்த திமுக, கூட்டணியை எப்படி அமைக்கும், அதற்கு என்ன பலன் கிடைக்கும் என்பதிலும் பல சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்த சூழலில் ரஜினி நாளை (31ம்தேதி) அரசியல் கட்சியை அறிவிப்பாரா என்றால், இல்லை என்பதுதான் பதில். அரசியல் பிரவேசத்திற்கான அடித்தளத்தை வலுப்படுத்தும் பணியை நாளை தொடங்கவுள்ளார் அது.

ரஜினியின் அரசியல் நிகழ்வுகளில் தொடர்ந்து பணிபுரிந்து வரும் சில முக்கிய பிரமுகர்களிடம் பேசியபோது, அவர்கள்கூறியது:
ரஜினி ரசிகர்கள், மன்ற நிர்வாகிகளை மட்டும் வைத்துக் கொண்டு தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க முடியாது. அதற்காக அவர்களை ஒதுக்கிவிட்டு விட்டு அரசியல் செய்வதும் சாத்தியமில்லை. எனவே, ரஜினி ரசிகர் மன்றத்தை சாராதவர்களை ஒருங்கிணைக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அதற்காக ரஜினியின் பெயரில் ஒரு பேரவை தொடங்கப்படும். அந்த பேரவையின் சார்பில் செயலி தொடங்கப்படும். பாபா முத்திரை கொண்ட சின்னமும், கொடியும் அறிமுகப்படுத்தப்படும்.

ரஜினி ரசிகர் மன்றத்தில் மாவட்ட வாரியாக உள்ள ரசிகர்கள் அனைவரும் இந்த பேரவையில் இணைக்கப்படுவர். அவர்களின் பெயர், விபரம், வயது, தொழில், மாவட்டம், குடும்பம், ஆதார் எண் உள்பட என முழு விபரங்களும் ஏற்கனவே தொகுக்கப் பட்டுள்ளது. இவை செயலியில் பதியப்படும். அடுத்த கட்டமாக, ரஜினி பேரவையில் இணைய அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படும். அவ்வாறு இணைபவர்களின் ஆதார் எண் உள்பட முழு விபரங்களும் சேகரிக்கப்படவுள்ளது.
இதில் கல்வியாளர்கள், தொழிலதிபர்கள், பெண்கள், கல்லூரி மாணவியர், தொழிலாளர்கள், விவசாயிகள், நெசவாளர்கள் என சமூகத்தின் அனைத்து தட்டு மக்களையும் முழு விபரத்துடன் இணைக்கும் பணியை பேரவையினர் மேற்கொள்வர். பாஜக போல் மிஸ்டுகால் உறுப்பினர்களோ, இதர கட்சியினர் சொல்வதுபோல் ஒன்றரைக் கோடி தொண்டர்கள் என்ற டயலாக் போல் இல்லாமல், மிக்த்துல்லியமாக எனது பலம் இதுதான் என்று காட்டும் வகையில் உறுப்பினர் சேர்க்கை நடைபெறவுள்ளது.

ஆறு மாதத்திற்குள் இந்த பணியை முடித்து, ரஜினி பேரவை முழு வடிவம் பெறும். இந்த பேரவையின் உறுப்பினர்களைக் கொண்டு மாவட்ட, மாநில அளவில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்கள் ரஜினி மன்ற நிர்வாகியாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால், நிர்வாகத்தில் ஒரு பதவியாவது அவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற முடிவோடு, அதற்கேற்ற ஆட்களும் தயார்படுத்தப்பட்டுள்ளனர். பேரவையில் நிர்வாகியாக தேர்வு பெற பல்வேறு நிபந்தனைகளும் உள்ளன.

இந்த நிபந்தைனைகளின் அடிப்படையில் மாவட்ட முழுவதும் பேரவையை பலப்படுத்தியபின், பொதுப்பிரச்சினைகளில் பேரவை கருத்து தெரிவிக்கும்; போராடும். இவை அனைத்தும் ரஜினியின் மேற்பார்வையில் நடைபெறும் என்றாலும், பேரவைக்கு ரஜினி தலைமை தாங்குவாரா என்பது இதுவரை உறுதியாகவில்லை. அவர் முழு ஈடுபாட்டுடன் பேரவைப் பணிகளை மேற்கொண்டாலும், தலைமை ஏற்பதில் தயக்கமாகவே இருக்கிறார். நிறுவனத் தலைவர் என்ற நிலையில் தான் இருந்து கொண்டு, தன்னை விட திறமையானவர்களைக் கொண்ட குழுவை அமைத்து பேரவையின் நடவடிக்கைகளை மேற்கொள்ள அவர் திட்டமிட்டுள்ளார் என்றனர்.

ஆக, நாளை ரஜினியின் பேரவை போன்ற ஒரு அனைவரையும் ஒருங்கிணைக்கும் ஒரு அமைப்பு உருவாகவுள்ளது. அந்த அமைப்பு செயல்வடிவம் பெற்றதும் அரசியல் கட்சியாக உருமாறப் போகிறது.

ஆர்.கே.நகரில் 89 ஆயிரம் வாக்காளர்களைக் கவர்ந்த டி.டி.வி.தினகரன் பேசும்போது, குறுகிய காலத்தில் என்னை மக்களிடம் மீடியாக்கள்தான் கொண்டு சேர்த்தன என்று குறிப்பிட்டார். அதே போல், மீடியாக்கள் துணையோடு மக்களிடம் நெருங்கத் தேவையான வியூகங்களும் வகுக்கப்பட்டு வருகின்றன.
மொத்தத்தில், ‘ஒரு வார்த்தை சொன்னாலே ஊர் மாற சக்தி கொடு’ என்ற தனது பாடல் வரிகளோடு களத்துக்கு வரப்போகிறார் சூப்பர் ஸ்டார்.