அமெரிக்க அதிபர் தேர்தலுக்கும் மன்னார்குடியின் பைங்கநாடு கிராமத்திற்குமான சம்பந்தம் என்ன?

சென்னை: அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டதையடுத்து, தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகேயுள்ள பைங்கநாடு என்ற கிராமம் தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஏனெனில், கமலாஹாரிஸின் தாய்வழி தாத்தா-பாட்டியினுடைய சொந்த ஊர் அந்த கிராமம்தான்.

கமலா ஹாரிஸின் தாயார் பெயர் ஷியாமளா. இவரின் தந்தை பி.வி.கோபாலன் சுதந்திரப் போராட்ட தியாகியாக இருந்தார். பின்னர், சிவில் சர்வீஸ் அதிகாரியாக உயர்ந்தார். கமலாவின் தாய்வழிப் பாட்டி ராஜம், அருகேயுள்ள துலசெந்திராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்.

அந்த கிராமத்தைவிட்டு, கமலாவின் முன்னோர்கள் வெளியேறிவிட்டாலும்கூட, அக்கிராமத்து கோயிலுடன் தொடர்ந்து தொடர்பு வைத்திருந்தார்கள். பல்வேறு காலக்கட்டங்களில் கோயில் புணரமைப்பிற்கு நிதி வழங்கியுள்ளனர்.

கடந்த 2014ம் ஆண்டு, கமலா ஹாரிஸின் பெயரில், அந்தக் கோயிலுக்கு நன்கொடை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கமலாவின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து அந்த கிராமத்தில் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.