சென்னை,

டந்த 5 நாட்களாக சசிகலா குடும்பத்தினரின் வீடுகள், நிறுவனங்கள் உள்பட 187 இடங்களில் 1800 அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

சென்னையில் உள்ள ஜெயா டிவி அலுவலகத்திலும், ஜெயா டிவியின் நிர்வாக அதிகாரி விவேக் வீட்டிலும் 5 நாட்களாக சோதனை நடைபெற்றது. அப்போது ஏராளமான ஆவனங்கள், நகைகள் கைப்பற்றப்பட்டதாகவும் வருமான வரித்துறையினர் கூறினர்.

அதைத்தொடர்ந்து ஜெயா டிவி-யின் சி.இ.ஓ-வும் சசிகலாவின் அண்ணன் ஜெயராமனின் மகனுமான விவேக்கை, வருமான வரித்துறையினர் விசாரணைக்கு அழைத்துச்சென்றனர். சுமார் 5 மணி அவரிடம் விசாரணை நடைபெற்றது.

இந்நிலையில், ஜெயா டிவியின் நிர்வாக இயக்குனரும், சசிகலா உறவினருமான விவேக் ஜெயராமன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, “எனது வீட்டில் வருமான வரித்துறை 5 நாட்களாக சோதனை நடத்தியது. ஜெயா டிவி, ஜாஸ் சினிமாஸ் நிர்வாகத்தை கடந்த 2 ஆண்டுகளாக  நான் நிர்வகித்து வருகிறேன். ஜெயா டிவி, ஜாஸ் சினிமா வருவாய் குறித்து கணக்கு கேட்டனர். அனைத்து ஆவணங்களையும் கொடுத்தேன்.

மேலும்,  திருமணத்தின் போது மனைவிக்கு போடப்பட்ட நகைகள் குறித்து கேட்டனர். எனது மனைவியின் நகைகளுக்கு உரிய ஆவணங்களை வைத்துள்ளேன், அதையும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் சமர்ப்பித்து விடுவேன் என்றார்.

மேலும் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர்,    அதிகாரிகள் முறையாக அவர்களது கடமையை செய்கிறார்கள். நான் எனது கடமையை செய்வேன். வருமான வரித்துறை அதிகாரிகளின் இந்த சோதனையை அரசியல் பழிவாங்கும் நோக்கமாக நான் பார்க்கவில்லை” என்றும் கூறியுள்ளார்.

இது, சாதாரண சோதனைதான். இதைப் பெரிதுபடுத்த வேண்டாம். மீண்டும் விசாரணைக்கு அழைத்தால், முழு ஒத்துழைப்பு அளிப்பேன்’ என்றார்.

இந்த நிலையில், ஜாஸ் சினிமாஸ் நிர்வாகிகள் மூன்று பேர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் இன்று ஆஜராகியுள்ளனர்.

அவர்களிடம் ஜாஸ் சினிமாஸ் வருமானம், வருமான வரி குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது