Random image

எச் ராஜா மீது என்ன நடவடிக்கை : தமிழிசையை கேட்கும் கஸ்தூரி

சென்னை

காவல்துறையையும் நீதிமன்றத்தையும் தரக்குறைவாக பேசும் எச் ராஜா மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள் என தமிழிசயை நடிகை கஸ்தூரி டிவிட்டரில் கேட்டுள்ளார்.

சமீபத்தில் நடந்த விநாயக சதுர்த்தி விழாவில் எச் ராஜா காவல்துறை அதிகாரிகளிடம் பேசும் வீடியோ வைரலானது.  அந்த வீடியோ பதிவில் எச் ராஜா, “ஜெயிலுக்குள் உள்ள பயங்கரவாதிகளுக்கு கலர் டிவி உள்ளது.   அதை அனுமதித்த உங்களுக்கு வெட்கமாயில்லையா?  காக்கி சட்டை அணிவதற்கு நீங்கள் வெட்கப்படவில்லையா?   தமிழக காவல்துறை ஒட்டுமொத்தமாக ஊழல் மயமாகி விட்டது” என பேசுகிறார்.  அத்துட உயர்நீதிமன்றத்தையும் சொல்லத்தகாத வார்த்தையால் விமர்சிக்கிறார்.

ராஜாவின் பேச்சுக்கு பல அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை கஸ்தூரி இது குறித்து ஒரு டிவிட்டர் பதிவு பதிந்துள்ளார்.  அந்த பதிவில், கஸ்தூரி, “எத்தனை கோபம் இருந்தாலும் வெளியில் பேசும் போது முறை தவறக் கூடாது.   உயர்நீதிமன்றத்தை தகாத வார்த்தையால் திட்டுவது,  காவல்துறையினரை லஞ்சம் வாங்குவதாக சொல்வது போன்றவை எச் ராஜா அவர்களுக்கு மலிவாக பேசுவதில் ஒரு மைல் கல் ஆகும்.

காவல்துறையினரிடம் விமானத்தில் தவறாக பேசியதாக  ஒரு பெண் மீது புகார் கொடுத்த தலைவி தனது கட்சிக்காரரின் இத்தகைய நடத்தைக்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்?  காவல்துறையும் நீதிமன்றமும் வேடிக்கை பார்க்கப் போகிறதா?” என கேள்வி எழுப்பி உள்ளார்.