ஷா மையம் அனுமதியின்றி எழுப்பிய கட்டிடங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பதை அறிக்கையாக தாக்கல் செய்ய மத்திய சுற்றுச்சூழல் துறை, தமிழக அரசிற்கு தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு.

கோவை மாவட்ட எல்லையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய வெள்ளியங்கிரி மலை அடிவாரத் தில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் சத்குரு ஜக்கி வாசுதேவால் ஈஷா யோகா மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில், மேலும் பல  கட்டடங்கள் கட்டுவதற்காக கோவை வனப்பகுதியில் அரசு அனுமதியின்றி பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை ஈஷா யோகா மையம் கபளிகரம் செய்து வருகிறது.

2005-2008 முதல் எச்ஏசிஏ எனும் மலை பகுதியை பாதுகாக்கும் குழுவின் அனுமதியில்லாமல் யானைகள் வசிப்பிடம் என பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் ஈஷா நிறுவனம் கட்டுமானத்தை நடத்தியதாக சிஏஜி  ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்தது.

சிஏஜி அறிக்கைபடி,  1994 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை ஈஷா அறக்கட்டளை பூலுவாப்பட்டி கிராமத்தில் 32,856 சதுர அடி பரப்பளவில் பல கட்டடங்களை கட்ட கிராமப்புற பஞ்சாயத்து அனுமதி பெற்று கட்டியிருப்பதாகவும், இதற்கு மலை பாதுகாப்பு குழுவிடமிருந்து  தடையில்லா சான்று பெறவில்லை என்று குற்றம் சாட்டியுருந்தது.

2003 ஆம் ஆண்டில் அரசாங்க உத்தரவின் படி, கிராமத்தில் வர்த்தக மற்றும் அலுவலக கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கு எச்ஏசிஏ ஒப்புதல் தேவை. ஆனால், ஒப்புதல் பெறாமலேயே கட்டுமானங்கள் நடைபெற்று உள்ளது. அதன்படி, 2005-2008 முதல் 11,873 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டிடங்கள கட்டப்பட்டுள்ளது. இது குறித்து 2012 பிப்ரவரி மற்றும் ஏப்ரல் ஆகிய மாதங்களில் விளக்கம் கேட்டும் ஈஷா தொடர்ந்து கட்டடம் கட்டி வந்ததாகவும், கட்டிடம் கட்டுவதை தடை செய்ய அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்திருந்தது.

இது தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், வனவிலங்குகள் வசிக்கும் பகுதியில் ஈஷா யோகா மையம் கட்டிடம் கட்டுவதை தடை செய்ய வேண்டும் என்றும், அங்கு மகாசிவராத்திரி அன்று நடைபெறும் விழாவுக்கும் தடை விதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கின் விசாரணையைத் தொடர்ந்து ஈஷா யோகா மையம் அனுமதியின்றி எழுப்பிய கட்டிடங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பதை அறிக்கையாக தாக்கல் செய்ய மத்திய சுற்றுச்சூழல் துறை, தமிழக அரசுக்கு  தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது.