சென்னை:

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டு, ஆலைக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று தமிழக சட்டசபையில் திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருகிறது.

இதற்கிடையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக அமைச்சர் ஜெயக்குமார்,  திமுக ஆட்சியில் ஸ்டெர்லைட்டை மூட எடுத்த நடவடிக்கை என்ன? என்று ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.

எதிர் கட்சிகள், எதிரி கட்சி போல் செயல்பட கூடாது என கூறிய அமைச்சர் ஜெயக்குமார், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசானை வெளியிடப்பட்டுள்ளது.  அரசாணை வெளியிட்டால், அது அரசு எடுத்த முடிவுதான் என்பது ஸ்டாலினுக்கு தெரியாதா? தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு மரியாதை இல்லை என்கிறாரா ஸ்டாலின்? என்றும் கேள்வி எழுப்பினார்.

மகக்ள் விரும்பாத ஸ்டெர்லைட் ஆலையை அரசும் விரும்பவில்லை எனவும், யாருக்கு பயந்தும் ஸ்டெர்லைட் ஆலையை மூடும் அறிவிப்பை அரசு வெளியிடவில்லை,  நீதிமன்றத்துக்கு ஸ்டெர்லைட் விவகாரம் சென்றாலும் தமிழக அரசின் நிலைப்பாடு ஆலை மூடல்தான் என்றும் தெரிவித்தார்.

ஸ்டெர்லைட் விவகாரத்தை அரசியலாக்க முடியாமல் போனதால் எதிர்க்கட்சிகள் குற்றத்தை தேடுகின்றனர் என்றும் குற்றம் சாட்டினார்.