புதுடெல்லி: இந்திய தலைநகரம் முழுவதும் உள்ள சுடுகாடுகள் மற்றும் இடுகாடுகளில், சுமார் 2098 சவங்களின் எரியூட்டல்கள் நடைபெற்றதாகவும், அப்பணியை டெல்லி முனிசிபல் ஏஜென்சிகள் மேற்கொண்டதாகவும் கூறியுள்ளனர் 3 உள்ளாட்சி நிர்வாகங்களின் பிரதிநிதிகள்.

டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் தரப்பில், இந்திய தலைநகரில், கொரோனாவால் மொத்தம் 2098 பேர் மரணமடைந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

ஆனால், டெல்லி மாநில அரசு வெளியிட்ட கடைசிக்கட்ட தகவலின்படி, டெல்லியில் கொரோனாவால் இறந்தவர்கள் 984 பேர் மட்டுமே என்று கூறப்பட்டுள்ளது.

எனவே, டெல்லியில் உண்மையாகவே என்னதான் நடக்கிறது? என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர் சமூக ஆர்வலர்கள். கொரோனா குறித்த உண்மை நிலவரத்தை அறிந்துகொள்ளும் உரிமை மக்களுக்கு உண்டு என்பதையும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.