இந்தியாவின் சில கிரிக்கெட் கேப்டன்களும் 183 ரன்களும்..!

இந்திய அணியை ஒரு வலுவான அணியாக மாற்றி, அதை வெற்றிப் பாதையில் திருப்பிய கேப்டன்களில் குறிப்பிடத்தக்கவர்கள் செளரவ் கங்குலி, மகேந்திரசிங் தோனி மற்றும் விராத் கோலி ஆகியோர்.

ஆனால், இவர்களின் கிரிக்கெட் வாழ்வின் ஏற்றத்திற்கும், 183 என்ற ரன்னுக்கும் ஒரு தொடர்பிருப்பதை நிராகரித்துவிட்டு கடந்துசெல்ல முடியவில்லை.

அதுதொடர்பான நினைவலைகள்:

கடந்த 1999ம் ஆண்டு உலகக்கோப்பையின் ஒரு போட்டியில், இலங்கை அணிக்கு எதிராக களமிறங்கிய இந்திய அணியில், செளரவ் கங்குலி 158 பந்துகளில் 183 ரன்களை விளாசினார். அதில் 17 பவுண்டரிகள் 7 சிக்சர்கள் அடக்கம்.

அந்த ரன்களை அடித்த அடுத்த 2 ஆண்டுகளில், அவர் இந்திய அணிக்கு கேப்டன் பொறுப்பேற்றார்.

* ‍அதே இலங்கைக்கு எதிராக, ஒரு போட்டியில் இந்திய அணி 298 ரன்களை சேஸிங் செய்தபோது, இந்தியாவின் தோனி 145 பந்துகளில் 183 ரன்களை வெளுத்துக் கட்டினார். அதில் 15 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்கள் அடக்கம்.

அந்த ரன்னை அடித்த அடுத்த 2 ஆண்டுகளில், இந்திய அணிக்கு கேப்டன் பொறுப்பேற்றார் தோனி.

* பின்னர், பாகிஸ்தானுக்கு எதிராக  329 ரன்களை சேஸிங் செய்ய வேண்டிய ஒரு போட்டியில், களமிறங்கிய விராத் கோலி, 148 பந்துகளில் 22 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 183 ரன்களை எடுத்தார்.

இந்த ரன்னை எடுத்த அடுத்த 2 ஆண்டுகளில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ஆனார் கோலி.

ஆக, இந்திய அணிக்குப் பொறுப்பேற்ற கடைசி 3 கேப்டன்கள் விஷயத்திலும் இந்த 183 என்ற ரன்கள் முக்கியத்துவம் பெறுவதை, ஒரு கிரிக்கெட் அதிசயமாகவே கருத வேண்டியுள்ளது..!