Random image

ரெய்டுக்கும் தி.மு.க.வுக்கும் என்ன தொடர்பு?

நியூஸ்பாண்ட்

“சாலை காண்டிராக்ட் நிறுவனங்கள் மீதான  ரெய்டு பரபரப்பாக நடந்தது. வழக்கம் போல அதன் பிறகு  வருமானத்துறை பக்கத்தில் இருந்து எந்த சத்தத்தையும் காணோமே!” – நியூஸ்பாண்ட் வந்தவுடன் வார்த்தைகளை வீசினோம்.

“அதற்கான காரணத்தைச் சொல்கிறேன். அதற்கு முன் இன்னும் சில விசயங்கள் இது குறித்து இருக்கின்றன..” என்று சஸ்பென்ஸ் வைத்தார் நியூஸ்பாண்ட்.

நாம் ஆர்வத்துடன் காது கொடுக்க.. நியூஸ்பாண்ட் ஆரம்பித்தார்:

“ஆபரேசன் பார்க்கிங் என்ற பெயரில் சென்னை, மதுரை, அருப்புக்கோடை உள்ளிட்ட இடங்களில் வருமானவரித்துறை ஜூலை 16.17  தேதிகளில் வருமானவரி சோதனை நடந்தது.

இதற்கான ஆயத்தப்பணிகளை கடந்த இரு மாதங்களுக்கு முன்பே வருமானவரித்துறையினர் ஆரம்பித்துவிட்டனர். முதல்வர் எடப்படி பழனிச்சாமியின் நெருக்கமானதாக அறியப்படும் – நெடுஞ்சாலை காண்ட்ராட்களை ஏகத்துக்கு எடுத்துவரும் –  எஸ்.பி.கே. குழுமத்தில் முக்கியமான நபர் நாகராஜன். இவர் இக்குழுமத்தின் இயக்குநர்களில் ஒருவர். அவரை குறிவைத்துத்தான் சோதனை ஆரம்பித்தது.

நாகராஜன் சென்றுவரும் இடங்கள், சந்திக்கும் நபர்கள், அலைபேசும் ஆட்கள், அவருடைய கார்கள், கார்கள் சென்ற இடங்கள், என்று அனைத்து தகவல்களும் வருமானத்துறை அதிகாரிகள் வசம் இருந்தன.

சென்னை டி.டி.கே சாலையில் இருக்கும் நாகராஜனின் வீட்டிற்குள் 16ம் தேதி அதிகாலை அதிரடியாக புகுந்தனர் அதிகாரிகள். இவர்களை எதிர்பார்த்திருந்தது போல இயல்பாக வரவேற்றார் நாகராஜன். அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு பதட்டமே இன்றி பதில் கூறினார். ஆனால் அவரது கார்கள் குறித்து அதிகாரிகள் கேட்டதும் பதட்டமானார்.

 

அவரிடம் இருக்கும் கார்கள் குறித்த விவரங்களை அதிகாரிகள் ஏற்கெனவே கையில் வைத்திருந்தனர். வெளியே சென்றிருந்த அந்த கார்களின் ஓட்டுநர்களைத் தொடர்பு கொண்டு, கார்கள் எங்கே இருக்கின்றன என்பதை அறிந்து அவற்றைக் கைப்பற்றினர்!”

“ இது குறித்து ஆளுநரிடம் மனு அளித்திருக்கிறார் தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின். ஆனால் . தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் தம்பி வீட்டில் நின்ற காரில் இருந்து ரூ. 24 கோடி கைப்பற்றப்பட்டதே.. கட்சி மீறிய உறவுகளோ.”

“ட்ரூ வேல்யூ ஹோம்ஸ் ரவிச்சந்திரன்,தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சொந்தத் தம்பி. எஸ்.பி.கே. நாகராஜனும், ரவிச்சந்திரனும் நீண்ட நாட்களாக தொழில் கூட்டாளிகள்.  தன்னை வருமானவரித்துறை குறி வைத்திருப்பதை ஏற்கெனவே அறிந்திருந்த நாகராஜன், ஒரு திட்டம் வகுத்தார். அதாவது  பல கார்களில் பணத்தை வைத்து நண்பர்கள், தெரிந்தவர்கள் வீடுகளில் நிறுத்தி வைத்துவிட்டார். நாகராஜன் நோக்கத்தை தெரிந்து அனுமதித்தவர்களும் உண்டு, தெரியாமல் அனுமதித்தவர்களும் உண்டு.

ரவிச்சந்திரனைப் பொறுத்தவரை தெரியாமல் அனுமதித்தார் என்று வருமானவரித்துறையினர் நினைக்கிறார்கள். அதனால்தான் ரவிச்சந்திரனின் வீட்டில் ரெய்டு நடத்தவில்லை. அங்கு நிறுத்தப்பட்டிருந்த நாகராஜனின் காரை மட்டுமே கைப்பற்றினார்கள்!”

“ஓ..”

“தவிர போயஸ் கார்டனில் உள்ள தீபக் என்பவரின் வீட்டில் நின்ற காரில் இருந்து  ரூ.28 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டது. அதே போல சென்னை சேத்துப்பட்டைச் சேர்ந்த ஜோன்ஸ் என்பவரின் வீட்டில் நின்றிருந்த ஒரு காரில் ரூ.28 கோடி பணக்கட்டுகள் பிடிபட்டது. மேலும் இவரது வீட்டில்நடந்த சோதணையில், கணிசமான அளவுக்குத் தங்கம் பிடிபட்டது.

இந்தத் தங்கத்தை பாலவாக்கம் சலீம் என்பவர் மூலமாக வாங்கியதா ஜோன்ஸ் கூறினார். இதையடுத்து பாலவாக்கத்துக்குச் சென்ற வருமானவரித்துறை அதிகாரிகள் சலீம் வீட்டை சல்லடை போட்டு அலசினார்கள். ஆனால் அங்கு ஏதும் சிக்கவில்லை.

அதே நேரம் சலீம் மகன் இக்பால், நாகராஜனுக்காக தங்கம் வாங்கிக் கொடுத்ததை ஒப்புக்கொண்டாராம்!”

“அட..”

“கேளும்.. கணக்கில் வராத ஏராளமான பணத்தை, தங்கத்தில் முதலீடு செய்திருக்கிறார் நாகராஜன். அதற்காக பில் இல்லாமல் தங்கம் கொள்முதல் செய்து  கொடுத்தவர்கள்தான் ஜோஸ் மற்றும் சலீம், ஆனால் அவர்கள் வாங்கியது  85 கிலோ தங்கம் என்று அதிகாரிகளுக்கு தகவல் ஏற்கெனவே கிடைத்தது. ஆனால், கைப்பற்றப்பட்டது 81 கிலோ மட்டும்தான் இன்னும் நான்கு கிலோ  தங்கம் எங்கே என்று சம்பந்தப்பட்டவர்களை துருவிக்கொண்டிருக்கிறார்கள் அதிகாரிகள்!”

“ஆக.. நேருவின் தம்பி ரவிச்சந்திரனுககும் இந்த ரெய்டு விவகாரங்களில் சிக்கிய எஸ்.பி.கே. நிறுவனத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்கிறீரா?”

”நான் அப்படிச் சொல்லவில்லையே.. எஸ்.பி.கே. செய்யாத்துரை இருக்கிறாரே.. அவர் தி.மு.க. – அ.தி.மு.க. இரு ஆட்சிகளிலும் கோலோச்சும் பேர்வழி என்கிறார்கள். அதாவது, சில காண்ட்ராக்டர்கள் ஒரு கட்சியின் ஆட்சியில்  ஏகப்பட்ட டெண்டர்களை எடுப்பார்கள்; ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும்  ஒதுங்கி நிற்பார்கள்.

ஆனால்  அ.தி.மு.க. ஆட்சி போய், தி.மு.க. அதிகாரத்துக்கு வந்தவுடன், இந்த செய்யாத்துரையின் ராஜாங்கம் தொடர்ந்தது.  . 2006-ல் தி.மு.க.ஆட்சியின் போது தென்மாவட்டங்களைச் சேர்ந்த மூன்று அமைச்சர்கள் ,எஸ்.பி.கே நிறுவனத்துக்கு மகிழ்ச்சியுடன் ஆதரவுக்கரம் நீட்டினார்கள் என்கிறார்கள். அதுமட்டுமல்ல மு.க. அழகிரிக்கு நெருக்கமாக இருந்த பொட்டு சுரேஷ் இந்த நிறுவனத்தின் அறிவிக்கப்படாத பங்குதாரர் போல் இருந்தாராம். அதோடு,  கே.என். நேருவின் தம்பி ரவிச்சந்திரனிடம் நல்ல உறவுடன் இருந்திருக்கிறார்!”

“அது சரி.. வழக்கம் போலவே இந்த ரெய்டும் இரண்டு நாட்களில் கரைகடந்துவிட்டதே..”

“ஆமாம். எஸ்.பி.கே. நிறுவனங்களில் நடைபெற்ற ரெய்டின் வேகம் ஜூலை 18ம் தேதியே குறைந்துவிட்டது.  இங்கு நடந்த ரெய்டுகள், மத்தியில் தரைவழியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் நபருக்கு வலியை ஏற்படுத்தியதாம். அதாவது அவர் மத்திய மூலமுதல்வருக்கு எதிராக உட்கட்சி அரசியல் செய்யும் இவரை அடக்கி வைக்கவும்தான் இந்த ரெய்டாம்!”

“ஆக.. தமிழ்நாட்டு அரசியலை தாண்டி டில்லி வரை இந்த ரெய்டில் இருக்கிறது என்று…”

– நாம் முடிக்கும் முன்பே.. நியூஸ்பாண்டின் செல்போன் சிணுங்க.. ஆன் செய்து காதில் ஒற்றி கிசுகிசுவென பேசி முடித்தவர், “அவசர வேலையாக செல்கிறேன். வந்த பிறகு பேசுவோம்” என்றபடியே கிளம்பினார்.