வாஞ்சிநாதன்

வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்த ஆஷ் துரையை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று, தானும் தற்கொலை செய்துகொண்டவர் வாஞ்சிநாதன்.

“ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்தே இந்த நடவடிக்கைில் வாஞ்சிநாதன்” ஈடுபட்டார் என்றும், “பார்ப்பனர்கள் உயர்த்திப்பிடிக்கும் சனாதன தர்மத்துக்கு எதிராக, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆஷ்துரை உதவிகள் செய்ததால் பார்ப்பனரான வாஞ்சிநாதன் இந்நவடிக்கையில் ஈடுபட்டார்” என்றும் இருவேறு கருத்துக்கள் உண்டு.

அதே நேரம் வாஞ்சிநாதனை சுதந்திரப்போராட்ட தியாகி என்று கொண்டாடி, அவர் ஆஷ்துரையை சுட்டுக்கொன்ற மணியாச்சி ரயில் நிலையத்துக்கு வாஞ்சி மணியாச்சி என்று பெயரிடப்பட்டது.

இந்த நிலையில் சுதந்திர தினமான நேற்று தமிழ் இந்து நாளிதழில் வாஞ்சிநாதனின் கொள்ளுப்பேரன் என்று மதியழகன் என்ற இரா.ஜெயகிருஷ்ணன் என்பவரது பேட்டி வெளியானது.

அந்த பேட்டி கட்டுரையில் கூறப்பட்டிருப்பதாவது:

“வாஞ்சிநாதனுக்கு ஒரே ஒரு மகள்; பெயர் லட்சுமி. வாஞ்சிநாதனின் உயிர் பிரிகையில் அவரது மனைவி பொன்னம்மாளின் வயிற்றில் லட்சுமி ஏழுமாதக் குழந்தை. அண்மையில் 106 வயதைக் கடந்திருக்கும் லட்சுமி திருச்சி துவாக்குடி அருகே எட்டடிவயல் கிராமத்தில் வசிக்கிறார். இவருக்கு மூன்று மகள்கள், இரண்டு மகன்கள். ஒரு பையன் இறந்துவிட, மற்ற பிள்ளைகள் ஆளுக்கொரு திசையில். தள்ளாத வயதில் லட்சுமியின் வாழ்க்கை தனிமையில்!

லட்சுமியின் மகன்களில் மூத்தவர் மதியழகன் என்கிற இரா.ஜெயகிருஷ்ணன். சித்த வைத்தியரான இவர், ‘வான்புகழ் வாஞ்சியார் இயக்கம்’ என்ற அமைப்பின் மூலம் இயற்கை விவசாயம் உள்ளிட்டவை குறித்துப் பிரச்சாரம் செய்துவருகிறார். 1972-லிருந்து மக்கள் பிரச்சினைகளுக்காக 53 முறை சிறை சென்றிருக்கிறார்.

இவர், ““தாத்தா (வாஞ்சிநாதன்) செஞ்ச காரியத்தால, எங்க பாட்டியைக் காட்டிக்குடுக்குறவங்களுக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம்னு அறிவிச்சுது பிரிட்டீஷ் சர்க்கார். ‘அவங்களுக்கு அடைக்கலம் குடுக்கிறவங்களோட சொத்துக்களை பறிமுதல் செஞ்சு சிறையில் அடைப்போம்’னு அறிவிச்சாங்க. இதுக்குப் பயந்துக்கிட்டு எங்க தாத்தாவோட அப்பா ரகுபதி ஐயர், எங்க பாட்டியை வீட்டுக்குள்ள வரக்கூடாதுன்னு சொல்லி துரத்திட்டார்.

அடைக்கலம் கொடுத்த தேவர்

வயித்துல பிள்ளையோட நிற்கதியா நின்ன எங்க பாட்டிக்கு, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தான் அடைக்கலம் குடுத்தாரு. எதைப்பற்றியும் கவலைப்படாம பாட்டிய தன்னோட கூட்டு வண்டியில ஏத்திக்கிட்டு கிளம்புனவரு, மூணு மாசமா பாட்டியை கூட்டு வண்டியில வெச்சுச்கிட்டே சுத்திருக்காரு. நல்லபடியா, பாட்டிக்கு எங்கம்மா பொறந்ததும் கந்தர்வக்கோட்டையில டீக்கடைக்காரர் ஒருத்தர்க்கிட்ட 25 ஆயிரத்தைக் குடுத்து எங்கம்மாவ ஒப்படைச்சிட்டாரு. மயிலாப்பூர் கச்சேரிரோட்டுல ஒரு வீட்டைப் பிடிச்சு பாட்டியையும் மறைவா தங்கவெச்சிருக்காரு தேவர்.

ஒருவேளை, பாட்டியை போலீஸ் கைது செய்தாலும் வாஞ்சியின் வாரிசு பிழைக்க வேண்டும் என்பதற்காக இருவரையும் பிரித்து வைத்த தேவர், பிறந்த பிள்ளை இறந்துவிட்டதாக பாட்டியிடம் சொல்லிவிட்டார். அம்மாவுக்கு திருமணம் ஆனப்பத்தான் தனது மகள் உயிரோடு இருப்பதே பாட்டிக்குத் தெரியும். அம்மாவுக்குத் திருமணம் ஆனதும் எங்க வீட்டுக்கு அடிக்கடி வருவார் தேவர். அவரை மாமான்னுதான் கூப்பிடுவேன்”

–    இவ்வாறு அக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

இந்த கட்டுரைக்கு சமூகவலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். மேலும், “ ஆஷ் துரையை வாஞ்சிநாதன் சுட்டுக் கொன்று தற்கொலை செய்துகொண்டது 17. 6.1911 அன்று. பசும்பொன் முத்துராமலிங்கம் பிறந்தது  30. 10.1908 அன்று.

அதாவது வாஞ்சநாதன் இறந்தபோது, முத்துராமலிங்கம் இரண்டே முக்கால் வயது குழந்தை.  இந்த வயதில் கர்ப்பிணிப் பெண்ணை வண்டியில் வைத்துப் பாதுகாத்திருக்க முடியுமா..  தவிர  4 வயதிலேயே 25 ஆயிரம் ரூபாய் பணத்தை வேறு ஒரு டீக்கடைக்காரரிடம் கொடுத்தாகச் சொல்வதை ஏற்க முடியுமா?

அன்றைக்கு தங்கத்தின் விலை கிராம் 1.80 காசு. 25000 ரூபாய்க்கு தோராயமாக 13890 கிராம் தங்கத்தை வாங்க முடியும். அப்படியானால், இன்றைய மதிப்பில் சுமார் 3,85,44,750 ரூபாய்!! இவ்வளவு பணத்தைக் கொடுத்து ஒரு குழந்தையைப் பாதுகாக்கச் சொல்கிறது மற்றொரு குழந்தை”  என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

பசும்பொன். முத்துராமலிங்கம்

இதற்கிடையே, வாஞ்சிநாதனின் மகள் என்று லட்சுமியும் பேரன் என்று மதியழகன் என்கிற இரா.ஜெயகிருஷ்ணனும் கூறுவதே தவறு என்று வாஞ்சிநாதனின் தம்பியின் பேரன் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து தி இந்து தமிழ் இதழ் நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே நேரம்  வரலாற்று ஆய்வாளர்கள்  “வாஞ்சிநாதனின் மனைவியை முத்துராமலிங்கம் பாதுகாத்தார் என்பது தவறான தகவல். பிற்காலத்தில்தான் வாஞ்சிநாதன் மனைவி பொன்னம்மாளை தனது தாயாக கருதி மரியாதை செய்தார் பொன்.முத்துராமலிங்கம்.

இது குறித்த ஒரு சம்பவம் சொல்லப்படுவது உண்டு.

அந்த சம்பவம்…

ஒருநாள் முத்துராமலிங்கத் தேவர் தனது உதவியாளரிடம் சிறிது பணம் கொடுத்து கதரில் காவி கலரில் இரண்டு புடவை வாங்கிவரச்  சொன்னார். தேவர் யாருக்காக புடவை வாங்கி வரச் சொன்னார் என்ற குழப்பமான சிந்தனையுடன் உதவியாளர் சென்று புடவையை வாங்கி வந்தார்.

மறுநாள் காலையில் தேவர் உதவியாளரையும் அழைத்துக்கொண்டு, அந்த சேலைகளை எடுத்துக்கொண்டு சென்னை மயிலாப்பூர் கச்சேரி ரோட்டில் உள்ள தனது உறவினர்  வீட்டுக்குச் சென்றார். அந்த வீட்டிற்குச் சென்றதும் உறவினரின் மனைவியிடம், அந்த அம்மாவை அழைத்து வா” எலும்பும் தோலுமாக காட்சி அளித்த ஒரு அம்மையார்  அழைத்து வரப்பட்டார்.

அந்த அம்மையார் கட்டியிருந்த புடவை கிழிந்து, ஒட்டுப் போடப்பட்டிருந்தது. அந்த அம்மையார் வந்ததும், முத்துராமலிங்கம்  அவர் காலில் விழுந்து வணங்கி, அந்தப் புடவைகளை அளித்தார்.

“எனக்கெதுக்குப்பா இதெல்லாம்?” என்றார் அந்த அம்மையார்.

அதற்கு, ஒரு தாய்க்கு மகன் செய்யவேண்டிய கடமையம்மா!” என்றார் முத்துராமலிங்கம். .

யார் அந்த அம்மையார் என்று கேட்டார் உதவியாளர். அவர்தான் வாஞ்சிநாதனின் மனைவி பொன்னம்மாள் என்றார் முத்துராமலிங்கம்.” என்று ஒரு தகவல் சொல்லப்படுகிறது.

“இந்த சம்பவம் உண்மையாக இருக்க வாய்ப்பு உண்டு.   தேசத்தின் மீது தீராப் பற்று கொண்டு விளங்கியவர் முத்துராமலிங்கம். ஆகவே தேசபக்தர் என்று தான் கருதுபவர்களுக்கு நிச்சயம் உதவியிருப்பார்.  ஆக, வாஞ்சிநாதனின் குடும்பத்தையும் முத்துராமலிங்கத்துக்கும் தொடர்பு  கொண்டு உதவியிருக்கலாம்    வாஞ்சிநாதனின் மனைவியை தனது தாயாராக முத்துராமலிங்கம் மதித்திருக்கலாம்.  ஆனால் பொன்னம்மாளுக்கு குழந்தை இருந்தது என்பது தவறு. வாஞ்சிநாதன் இருக்கும்போதே ஒரு குழந்தை பிறந்து இறந்துவிட்டது ” என்று  வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.