சூரிய மின் நிலைய திறப்பு விழா மர்மம் என்ன?!

நெட்டிசன்: வாட்ஸ்அப் தகவல்

அதானி” குழுமத்தின் சார்பில் ஜெயலலிதாவின் உருவப் படத்தோடு அரைப் பக்க விளம்பரம் ஒன்று நேற்றைய நாளேடுகளில் வெளிவந்துள்ளது. அதில் தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா, கமுதியில் அமைந்துள்ள அதானி குழுமத்தின் 648 மெகாவாட் சூரிய மின் சக்தி ஆலையை தமிழக மக்களுக்காக 21-9-2016 காலை 11 மணிக்கு தேசத்துக்கு அர்ப்பணிக்க உள்ளார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

ஒருவேளை முதலமைச்சர் இந்த விழாவிற்காகக் கமுதி செல்கிறாரோ என்று அந்த விளம்பரத்தைப் படித்தவர்கள் சந்தேகப்பட்டாலும், இன்று வெளிவந்த ஏடுகளில் அந்தத் தொழிற்சாலையை சென்னையில் இருந்தவாறே தொடங்கி வைத்தார் என்று கூறப்பட்டுள்ளது.

adani-group

இந்த நிகழ்ச்சி குறித்து மாநில அரசிடமிருந்து ராமனாதபுரம் மாவட்ட அதிகாரிகளுக்கோ, பத்திரிகையாளர் களுக்கோ எந்தவிதமான தகவலும் அனுப்பப்படவில்லை என்றும், பத்திரிகையாளர்கள் நேரடியாக சூரிய ஒளி மின் நிலையத்தைப் பார்க்க முயற்சி செய்தபோது, அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்றும் செய்தி வந்துள்ளது.

பலகோடி ரூபாய்க்கு தனியார் ஒருவரிடம், எந்தவிதமான டெண்டரும் இல்லாமல், நியமன முறையில் மின்சாரம் வாங்க ஒப்பந்தம் செய்து கொண்டதை பற்றித் தான் தற்போது “டெக்கான் கிரானிகல்” எழுதியுள்ளது. இந்தத் துறைக்கு அமைச்சராக இருந்தவர் வீடுகளிலே தான் வருமான வரித் துறை இரண்டு நாட்களுக்கு முன்பு சோதனை செய்திருக்கிறது.

அந்தத் துறையின் அமைச்சராக இருந்தவரின் நண்பர் வீட்டிலே எடுக்கப்பட்ட 5 கோடி ரூபாய், அமைச்சருடைய சொந்தப் பணம் என்பதற்கான ஆவணங்கள் கிடைத்துள்ளன என்றும், அந்த நபர் ஓ. பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், செந்தில் பாலாஜி ஆகியோருக்கு நெருக்கமாக இருந்து, அவர்களுடைய பணப் பரிவர்த்தனைகளுக்கும் பாதுகாவலராக இருந்தவர் என்றும் செய்திகள் வந்துள்ளன.

ஆனால் மற்றவர்களை விட்டு விட்டு, நத்தம் விசுவநாதன் சம்பந்தப்பட்ட இந்த ஊழல்களையும் மறைப்பதற்கான முயற்சிகள் தற்போது நடப்பதாகவும், தவறு செய்தவர்கள் மீதான குற்றம் உறுதியானால், அதிலே தாங்களும் சிக்கிக் கொள்ள நேரிடும் என்பதற்காக, முன்னாள் அமைச்சர்கள் செய்த ஊழலை மறைக்க முயற்சிகள் நடைபெறுவதாகவும் அதற்கு டெல்லி மூத்த அமைச்சர் ஒருவர் உறுதுணை புரிவதாகவும் தகவல்கள் வருகின்றன.

சோதனை செய்த வருமான வரித் துறையும் அதைப்பற்றிய தகவல்களை வெளிப்படையாகத் தெரிவிக்காமல் இருப்பது என்ன காரணத்தால் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. முன்னாள் – இந்நாள் அ.தி.மு.க. அமைச்சர்கள் மீது தற்போது கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை தானோ என்ற சந்தேகத்தைத் தமிழக மக்கள் உறுதி செய்து கொண்டு விடுவார்கள்!.

-வாட்ஸ்அப் தகவல்