சீன கோடீஸ்வரர் சொல்லும் புதிய யோசனை என்ன?

பெய்ஜிங்: சீனாவின் மாபெரும் கோடீஸ்வரரான ஜேக் மா, செயற்கை நுண்ணறிவின் உதவியுடன், மக்கள் ஒரு வாரத்திற்கு 12 மணிநேரங்கள் மட்டுமே பணி செய்யும் சூழல் உருவாக்கப்பட வேண்டுமென்ற தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

சீனாவில் நிலவும் அதிகநேர பணிபுரியும் சூழலை ஆதரித்துப் பேசிவந்தவர் ஜாக் மா என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, இந்தப் புதிய யோசனையையும் கூறியுள்ளார்.

சீனாவின் வர்த்த நகரமான ஷாங்காயில் நடைபெற்ற உலக செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அலிபாபா குரூப் ஹோல்டிங் லிமிடெட் நிறுவனத்தின் இணை நிறுவனரான ஜாக் மா, “வாரத்திற்கு 3 நாட்கள் மட்டும், ஒரு நாளைக்கு 4 மணிநேரங்கள் என்ற அளவில் மட்டுமே, தொழில்நுட்பத்தின் துணைகொண்டு, மக்கள் வேலை செய்தால் போதுமானது” என்று கூறியுள்ளார்.

அவருடன் மேடையில், டெஸ்லா.இங்க் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி எலோன் மஸ்க்கும் உடனிருந்தார்.

“எனக்கு வேலைகளைப் பற்றி கவலையில்லை. எங்கள் நிறுவனம் மக்களின் வேலையை அகற்றுவதைவிட, அவர்களுக்கு உதவிசெய்யும். கணிப்பொறிக்கு சிப் மட்டுமே உண்டு. ஆனால், மனிதர்களுக்கு இதயம் உண்டு. அங்கிருந்துதான் ஞானம் உண்டாகிறது” என்று அவர் மேலும் கூறினார்.