குறிப்பிட்ட நேரம் தாண்டி பட்டாசு வெடித்தால் என்ன தண்டனை?

தீபாவளியன்று குறிப்பிட்ட நேரத்தில்தான் பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அந்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்தால் எந்த பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் அதற்கு என்ன தண்டனை என்கிற கேள்வி எழுந்துள்ளது.

இந்தியா முழுவதும் பட்டாசுகளுக்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பட்டாசுகளை தயாரிக்கவோ விற்பனை செய்யவோ, வெடிக்கவோ தடை இல்லை என தீர்ப்பளித்தது. அதேசமயம், பட்டாசுகளை தயாரிக்கவும் வெடிக்கவும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டது. .

தீபாவளி அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என உத்தவிட்ட உச்சநீதிமன்றம், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது இரவு 11.30 மணி முதல் இரவு 12.30 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என நிபந்தனை விதித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு, தீர்ப்பில் திருத்தம் செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. அந்த மனுவில், தமிழகத்தில் நரகாசுரனை வதம் செய்த நாளை, தீபாவளியாக மக்கள் கொண்டாடுவதாகவும், இதற்கான கொண்டாட்டங்கள் அதிகாலை 4 மணிக்கே தொடங்கிவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

தீபாவளி கொண்டாட்டத்தில் வடக்கிலும், தெற்கிலும் அதிக வேறுபாடு உள்ளது என்றும், எனவே தமிழகத்தில் அதிகாலை 4.30 மணியிலிருந்து, மாலை 6.30 மணி வரை பட்டாசு வெடித்து பண்டிகையை கொண்டாட அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதேபோல் பட்டாசு தயாரிப்பு மற்றும் விற்பனை தொடர்பான நிபந்தனைகளை தளர்த்தக்கோரி சிவகாசி பட்டாசு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த இரண்டு மனுக்களும் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி என்றும், எந்த 2 மணி நேரம் என்பதை அரசு முடிவு செய்து கொள்ளலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து தமிழ்நாடு அரசு, தீபாவளியன்று காலை 4 மணி முதல் 5 மணி வரை, இரவு 9 மணி முதல் 10 மணி வரை பட்டாசு வெடிக்கலாம் என்று   அறிவித்துள்ளது.

என்.டி. முருகன்

இந்த நிலையில் அரசு அறிவித்துள்ள நேரத்தை மீறி பட்டாசு வெடித்தால் எந்த பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் அதற்கு என்ன தண்டனை என்கிற கேள்வி எழுந்துள்ளது.

குறிப்பிட்ட உத்தரவில் உச்சநீதிமன்றம், “இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை காவல்துறை உறுதி செய்ய வேண்டும். 144 பிரிவை அமல் செய்து உத்தரவை நிறைவேற்றலாம்.  இதர நேரங்களில் பட்டாசு வெடிக்கப்படவில்லை என்பதற்கு அந்தந்த பகுதி காவல்துறை உயர் அதிகாரி பொறுப்பேற்க வேண்டும்.   நேரம் தாண்டி வெடிப்பவர்கள் மீது ஐ.பி.சி.  பிரிவு 188 பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம் ” என்று உச்சநீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வழக்குரைஞர் என்.டி.முருகனிடம் பேசினோம்.

அவர்  தெரிவித்ததாவது:

“குறித்த இரண்டு மணி நேரத்தை மீறி மற்ற நேரத்தில் பட்டாசு வெடித்தால் தடுக்க மற்றும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் இதை எந்த அளவுக்கு நடைமுறைப்படுத்த முடியும் என்பது கேள்விக்குறியே.

தீபாவளி அன்று பலரும் பட்டாசு வெடிப்பார்கள். கேப், ஊசி வெடி போன்ற சிறு வெடிகள் உள்ளன. இதல் பெரும் புகையோ, சத்தமோ வராது. சிறுவர்கள்கூட தைரியமாக வெடிப்பார்கள். இதை நாள் முழுதும் வெடித்துக்கொண்டே இருப்பார்கள். உச்சநீதிமன்றத்தல் இந்த வெடிகளையும் குறிப்பிட்டிருக்கிறார்களா அல்லது அணுகுண்டு, ராக்கெட் போன்ற வாணவேடிக்கை மற்றும் பெரும் வெடிகளைச் சொல்லியிருக்கிறார்களா என்பது தெளிவாக இல்லை.

குறிப்பிட்ட நேரம் தாண்டி பட்டாசு வெடிப்பவர்கள் மீது ஐ.பி.சி. 188ன் படி நடவடிக்கை எடுக்கலாம் என்று உச்சநீதிமன்ற உத்தரவு தெரிவிக்கிறது. அப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டால்,  ஆறு மாதம் வரை சிறை அல்லது ஆயிரம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

ஆனால் பண்டிகை கொண்டாட்டத்தில் இருக்கும் மக்கள் மீது இந்த நடவடிக்கையை காவல்துறை எடுக்குமா என்பது கேள்விக்குறியே!” என்றார்

“பெரும்பாலும் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள்தான் பட்டாசு வெடிப்பதில் விருப்பமாக இருப்பார்கள். அவர்கள் மீதும் இச்சட்டம் பாயுமா” என்று கேட்டோம்.

அதற்கு அவர், “18 வயதுக்குட்பட்டவர்கள் மீது ஐ.பி.சி. 188 பிரிவை பயன்படுத்த முடியாது. சிறுவர் நீதிமன்றம்தான் நடவடிக்கை எடுக்க முடியும்” என்றார்.

“தீபாவளி அன்று குறிப்பட்ட நேரத்தில் மட்டும் பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அப்படியானால் மற்ற நாட்களில் இது பொருந்தாது அல்லவா” என்றோம்.

அதற்கு வழக்குரைஞர் என்.டி. முருகன்,  “ஆம். அது குறித்தும் உத்தரவில் இல்லை” என்றார்.

-டி.வி.எஸ். சோமு

2 thoughts on “குறிப்பிட்ட நேரம் தாண்டி பட்டாசு வெடித்தால் என்ன தண்டனை?

  1. அப்போ கூம்பு ஸ்பீக்கர் உத்தரவை இத்தனை காலம் அவமதிக்கும் ஆட்களை எல்லாம் என்ன செய்தார்கள் மாநில அரசு சட்ட துறையினர்? அரசுகளே நதிநீர் தீர்ப்புக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே? அதெல்லாம்!?

  2. நாட்ல எவ்வளவோ பிரச்னையை இருக்க,”இந்த விஷயத்துக்கு ஏன் இவ்வளவு

    முக்கியத்துவம்”, என்று புரியவில்லை.என்ன நடக்குது என் இந்திய திருநாட்டில்?.

Leave a Reply

Your email address will not be published.