கொல்கத்தா: உலகக்கோப்பை டி-20 தொடர் குறித்து, ஐசிசி தனது முடிவை வெளியிட்டப் பிறகே, ஆசியக் கோப்பை டி-20 கிரிக்கெட் தொடர் குறித்து முடிவுசெய்யப்படும் என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டுள்ளது.

இந்தாண்டின் செப்டம்பர் மாதத்தில், பாகிஸ்தான் மண்ணில் ஆசியக் கோப்பை டி-20 தொடரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஆனாலும், கொரோனா பரவல் காரணமாக, அத்தொடர் திட்டமிட்டபடி நடக்குமா? என்ற சந்தேகம் ஒருபுறம் உள்ள நிலையில், பாகிஸ்தான் மண்ணில் இந்திய அணி பங்கேற்பதும் கேள்விக்குறியாக உள்ளது.

எனவே, ஆசியக் கோப்பை டி-20 தொடர் வேறு ஏதேனும் ஒரு நாட்டில் நடத்தப்படலாம் என்ற செய்திகளும் உலவுகின்றன.

இந்நிலையில், வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் நஜ்முல் ஹசன் தலைமையில் நடைபெற்ற ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நிர்வாகக் குழு கூட்டத்தில், பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் பங்கேற்றனர்.

இதில், உலகக்கோப்பை டி-20 குறித்து ஐசிசி அமைப்பின் நிலைப்பாடு வெளியான பிறகு, ஆசியக் கோப்பை டி-20 தொடர் குறித்து திட்டமிடலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், ஆசியக் கோப்பைத் தொடர் பாகிஸ்தானில் நடைபெறாத பட்சத்தில், அத்தொடரை இலங்கையில் நடத்துவதற்கு, அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளது.