சிஎஸ்கே அணியின் வெற்றியின் ரகசியம் என்ன? தோனி ருசிகர பதில்….

சென்னை:

டந்த ஆட்டத்தின்போது, சன் ரைசர்ஸ் அணியிடம் தோல்வியடைந்த சிஎஸ்கே நேற்றைய ஆட்டத்தின்போது, சன் ரைசர்ஸை வீழ்த்தி பழி வாங்கியது.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்,  சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றியின் ரகசியம் என்ன என்று சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனியிடம் வினவினார். ஆனால், அதற்கு சிரித்துக்கொண்டே பதில் அளித்த தல… தோனி, ரகசியத்தை சொன்னால் என்னை ஏலத்தில் எடுக்க மாட்டார்கள் என்று பதில் அளித்து வியப்பில் ஆழ்த்தினார்.

சிஎஸ்கே அணி இதுவரை ஆடிய 11 ஆட்டங்களில், 8 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன் காரணமாக 16 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் இருப்பதுடன் பிளே ஆஃப் சுற்றுக்கும் தேர்ச்சி பெற்றுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற  இரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்து வந்த சென்னை அணி, நேற்றைய வெற்றி மூலம் மீண்டும் விசில் போட வைத்துள்ளது. கடந்த சில போட்டிகளில் சரியான முறையில் விளையாடாமல் ரசிகர்களை ஏமாற்றி வந்த  ஷேன் வாட்சன் நேற்று தனது மிரட்ட லான ஆட்டத்தின் மூலம் தான் இன்னும் பாமில்தான் இருக்கிறேன் என்பதை நிரூபித்து காண்பித்தார்.

ஆட்டநாயகன் விருது பெற்ற ஷேன் வாட்சன், 53 பந்துகளில், 9 பவுண்டரிகள், 6 சிக்ஸர்களுடன் 96 ரன்களை எடுத்திருந்தார். கலீல் அகமது மற்றும் ரஷித் கானின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினார் ஷேன் வாட்சன்.

போட்டி முடிந்தபின் பேசிய ஐதராபாத் அணியின் கேப்டன் புவனேஷ்வர் குமார், ஷேன் வாட்சனின் அதிரடி ஆட்டத்தை தங்களால் தடுக்க முடியவில்லை என் ஒப்புக்கொள்வதாக தெரிவித்தார். ஷேன் வாட்சன் சுரேஷ் ரெய்னா ஜோடியின் அதிரடி ஆட்டம் காரணமாக மைதானத்தில் விசில் பறந்தது.

போட்டி முடிந்தபின், ஆட்டம் குறித்து கூறிய ஹர்பஜன் சிங்  “ஷேன் வாட்சன் அணிக்கு முக்கிய மான ஒரு நபர்” என்று கூறினார். அதுபோல, “வாட்சன் தங்களது அணியின் வெற்றிக்கு உதவும் ஒரு ஆட்டக்காரர்” என்று கேப்டன்  தோனியும் தெரிவித்துள்ளார்.

அப்போது,  சென்னை அணியின் வெற்றி ரகசியம் குறித்து தோனியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சிரித்துக்கொண்டே பதில் அளித்த தோனி….  “அது ரகசியம்; அதை நான் அனைவரிடமும் சொன்னால் என்னை ஏலத்தில் எடுக்கமாட்டார்கள்.” என்று நாசூக்காக கூறினார்.

தொடர்ந்து கூறிய தோனி,   “சென்னை அணியின் வெற்றிக்கு, போட்டியாளர்களை தவிர்த்து அதன் ஊழியர்களும் உறுதுணையாக இருக்கின்றனர். அவர்கள் அணியினருக்கு நேர்மறையான சூழலை வழங்குகின்றனர். சென்னை ரசிகர்களும் அணிக்கு ஊக்கத்தை அளித்து வருகின்றனர்… இதை தவிர நான் ஓய்வு பெறும் வரை வேறு எதையும் சொல்வதற்கு இல்லை” என்றார்.