ந்த சஷ்டி விழாவின் 6வது நாளான  இன்று அனைத்து முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி வெகு விமரிசையாக கொண்டாப்பட்டது.

ஆனால், திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடைபெறும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி வரலாற்று சிறப்புமிக்கது. எனவேதான் பக்தகோடிகள் அனைவரும் செந்தூரை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

முருகப்பெருமான் சூரபத்மனை, ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று வெற்றி கொண்டு ஆட்கொண்டார். இந்நாளே கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது.

இந்நிகழ்வு திருச்செந்தூர் தலத்தில் நடந்தது என்பது ஐதிகம். எனவேதான்  கந்தசஷ்டி விழா இத்தலத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

கந்தசஷ்டி கொண்டாடுவது ஏன்?

சூரபத்மன் வதம் தவிர்த்து, கந்த சஷ்டி விழா கொண்டாடப்படுவதற்கு, வேறு இரண்டு காரணங்களும் இருப்பதாக மகாபாரதம், கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.

ஒருசமயம் முனிவர்கள் சிலர், உலக நன்மைக்காக ஒரு புத்திரன் வேண்டுமென்பதற்காக யாகம் ஒன்று நடத்தினர். ஐப்பசி மாத அமாவாசையன்று யாகத்தை துவங்கி, ஆறு நாட்கள் நடத்தினர்.

யாக குண்டத்தில் எழுந்த தீயில் இருந்து, ஒவ்வொரு நாளும் ஒரு வித்து வீதமாக ஆறு வித்துக்கள் சேகரிக்கப்பட்டன. அந்த வித்துக்களை ஆறாம் நாளில் ஒன்றாக்கிட, முருகப்பெருமான் அவதரித்தார்.

இவ்வாறு முருகன் அவதரித்த நாளே கந்தசஷ்டி என மகாபாரதம் கூறுகிறது.

கந்தபுராணத்தில் கச்சியப்ப சிவாச்சாரியார், தேவர்கள், அசுரர்களை எதிர்க்கும் வல்லமை பெறவும், அவரது அருள் வேண்டியும் ஐப்பசி மாத வளர்பிறையிலிருந்து ஆறுநாட்கள் கும்பத்தில் முருகனை எழுந்தருளச்செய்து, நோன்பு இருந்தனர். முருகனும் அவர்களுக்கு அருள்செய்தார்.

இதனை நினைவுறுத்தும் விதமாகவே ஐப்பசி அமாவாசையை அடுத்து கந்தசஷ்டி கொண்டாடப்படுகிறது என்கிறார்.

திருச்செந்தூரில் முருகன் “ஞானகுரு’வாக அருளுகிறார்.  அசுரர்களை அழிக்கும் முன்பு, குருபகவான் முருகனுக்கு அசுரர் களை பற்றிய வரலாறை இத்தலத்தில் கூறினார். எனவே இத்தலம், “குரு தலமாக’ கருதப்படுகிறது.

பிரகாரத்தில் உள்ள மேதா தெட்சிணாமூர்த்தி கூர்மம், அஷ்ட நாகங்கள் அஷ்ட யானைகள், மேதா மலை என நான்கு ஆசனங்களின் மீது அமர்ந்திருக்கிறார். இவருக்கு பின்புறம் உள்ள கல்லால மரத்தில் 4 வேதங்களும், கிளிகள் வடிவில் இருக்கிறது.

அறிவு, ஞானம் தரும் மூர்த்தியாக அருளுவதால் இவரை, “ஞானஸ்கந்த மூர்த்தி’ என்று அழைக்கிறார்கள்.

வழக்கமாக கைகளில் அக்னி, உடுக்கையுடன் காட்சி தரும் தெட்சிணாமூர்த்தி, இங்கு மான், மழுவுடன் காட்சி தருகிறார்.

குரு பெயர்ச்சியன்று திருச்செந்தூர் முருகனை வணங்கினால், குருவினால் உண்டாகும் தீய பலன்கள் குறையும்.

சூரனை சம்ஹாரம் செய்ய வந்த முருகன், இத்தலத்தில் சுப்பிரமணியராக நான்கு கரங்களுடன் காட்சி தருகிறார்.

இவர் வலது கையில் மலர் வைத்து, சிவபூஜை செய்தபடி தவக்கோலத்தில் இருப்பது சிறப்பான அமைப்பு. இவரது தவம் கலைந்துவிடக்கூடாது என்பதற்காக, இவருக்கு பிரகாரம் கிடையாது. இவருக்கான பிரதான உற்சவர் சண்முகர், தெற்கு நோக்கி தனி சன்னதியில் இருக்கிறார். இவரை சுற்றி வழிபட பிரகாரம் இருக்கிறது.

மூலவருக்குரிய பூஜை மற்றும் மரியாதைகளே இவருக்குச் செய்யப்படுகிறது.