புதுடெல்லி: காஷ்மீர் பிரச்சினையானது இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான உள்விவகாரம் என்பதில் ரஷ்யாவுக்கு எந்த சந்தேகமும் இல்லை என்று அந்நாட்டு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்தியாவுக்கான ரஷ்யத் தூதர் நிகோலே குடாஷெவ் கூறியதாவது, “காஷ்மீர் விவகாரத்தைப் பொறுத்தவரை இந்தியா மீது ரஷ்யாவுக்கு சந்தேகம் இல்லை. இது முற்றிலும் இரண்டு நாடுகள் சம்பந்தப்பட்ட உள்விவகாரம்.
அதை அவர்களே பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். மார்ச் மாதம் 22 மற்றும் 23ம் தேதிகளில் ரஷ்யாவில் நடைபெறும் ரஷ்யா – சீனா – இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையிலான முத்தரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்க இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ரஷ்யா வருகிறார்” என்றார் அவர்.
ரஷ்ய நாட்டிடமிருந்து ‘எஸ்-400’ ஏவுகணைகளை வாங்குவதற்காக இந்தியாவின் சார்பில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருவதாகவும், 2025ம் ஆண்டிற்குள் அந்த ஏவுகணைகள் முழுவதும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என்றும் தொடர்புடைய தகவல்கள் தெரிவிக்கின்றன.