லண்டன்: வெஸ்ட் இண்டீஸ் – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்டின் இரண்டாம் நாள் ஆட்ட முடிவில், தனது முதல் இன்னிங்ஸில் 57 ரன்களுக்கு 1 விக்கெட் இழந்துள்ளது விண்டீஸ் அணி.
முன்னதாக, முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 204 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இது பார்வையாளர்கள் இல்லாத டெஸ்ட் போட்டியாகும்.
இப்போட்டியில், டாஸ் வென்று பேட்டிங் தேர்வுசெய்த இங்கிலாந்து அணியில், தற்காலிக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அடித்த 43 ரன்கள்தான் அதிகபட்சம். அதற்கடுத்து, ரோரி ஜோஸ் பட்லர் 35, டாம் பெஸ் 31 மற்றும் ரோரி பர்ன்ஸ் 30 என்று பங்களிக்க, ஒருவழியாக 200ஐ கடந்தது அந்த அணி.
வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் பிரமாதமாக பந்து வீசிய ஜேஸன் ஹோல்டர் 6 விக்கெட்டுகளை அள்ளினார். கேப்ரியல் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, மற்ற பந்துவீச்சாளர்களுக்கு அதிக வேலை வைக்கவில்லை. அந்த அணியில், மொத்தம் 4 பந்துவீச்சாளர்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டனர்.
அடுத்த களமிறங்கிய விண்டீஸ் அணியில், பிராத்வெய்ட் 20 ரன்கள் அடித்திருக்க, ஜான் கேம்ப்பெல் 28 ரன்களும் அடித்து ஆட்டமிழக்க, இரண்டாம் நாள் முடிவில், 57 ரன்களை எடுத்த அந்த அணி 1 விக்கெட்டை இழந்திருந்தது. இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.