டில்லி:

டில்லி ராம்லீலா மைதானத்தில் ஜன் ஆக்ரோஷ் (மக்களின் கோபம்) என்ற பெயரில் காங்கிரஸ் சார்பில் இன்று பேரணியை ராகுல்காந்தி இன்று நடத்தினார்.

அப்போது அவர் பேசுகையில், ‘‘ மோடி ஆட்சியில் சீர்கேடுகள் நிறைந்துள்ளது. சிறுபான்மையினர் தாக்கப்படுகின்றனர். ஊழல் அதிகரித்துள்ளது. ஜனநாயக அமைப்புகளை ஆர்எஎஸ்எஸ், பாஜக இணைந்து சிதைத்து வருகின்றன. நாட்டின் காவல்காரர் என்று கூறும் மோடி இவற்றை மவுனமாக வேடிக்கை பார்க்கிறார். நீதிபதி லோயா மர்ம மரணம் குறித்து பிரதமர் வாய்திறந்து பேசவில்லை’’ என்றார்.

மேலும், அவர் பேசுகையில், ‘‘சீனப் பயணத்தில் டோக்லாம் குறித்து பேசவில்லை. இவர் என்ன விதமான பிரதமர்?. காங்கிரஸ் ஆட்சியில் இருந்த 70 ஆண்டுகளில் நாட்டில் அனைத்து தரப்பு மக்களும் ஒன்றாக நடத்தப்பட்டனர். ஆனால் தற்போது தலித்களும், சிறுபான்மையினரும் நசுக்கப்படுகின்றனர்.

வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துவிட்டது. நாங்கள் சிறப்பாக அறிமுகப்படுத்திய ஜிஎஸ்டி வரியை ‘கப்பார் சிங் வரி’யாக மாற்றிவிட்னர். பாலியல் பலாத்காரத்தில் பாஜக எம்எல்ஏக்கள் ஈடுபடுகின்றனர். இது தான் பாஜக ஆட்சியா?’’ என்றார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், ‘‘கடன் தள்ளுபடி செய்யாததால் விவசாயிகள் அழுத்தத்தில் உள்ளனர். கார்ப்பரேட் நிறுவனங்களின் கடனை தள்ளுபடி செய்யப்படுகிறது. விவசாயிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை காங்கிரஸ் எடுக்காமல் இருந்திருந்தால் நிலம் முழுவதையும் மோடி அரசு அபகரித்திருக்கும். காங்கிரஸ் மக்களிடத்தில் அன்பை பரப்புகிறது. பாஜக, ஆர்எஸ்எஸ் வெறுப்புணர்வை பரப்புகின்றன.

கர்நாடகா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் சட்டமன்ற தேர்தல்கள், 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றி பெறும். பாஜக.வை காங்கிரஸ் தோற்கடிக்கும். காங்கிரஸ் மூத்த உறுப்பினர்கள், இளம் தலைவர்கள் என அனைவரது கருத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். அனைவருக்கும் கருத்து சுதந்திரம் வழங்கப்படும்’’ என்றார்.