கடந்த 1990ம் ஆண்டு பீகார் சட்டசபைத் தேர்தலில் ஜனதாதளம் கட்சி பெரும்பான்மை பெறுகிறது. அப்போது, முதலமைச்சர் யார் என்பதில் கடும் போட்டி நிலவுகிறது.

கடந்த 1977ம் ஆண்டு இந்திரா எதிர்ப்பலையில், தனது 29 வயதிலேயே மக்களவை உறுப்பினரான லாலு பிரசாத் யாதவும் அந்தப் போட்டியில் இருக்கிறார். அன்றைய மத்திய கூட்டணி அரசில், துணைப் பிரதமராக இருந்த தேவிலாலின் ஆதரவுடன் பீகார் ஆட்சியைப் பிடிக்கிறார் லாலு பிரசாத். அப்போது முதல் பீகாரில் அவரின் சகாப்தம் ‍துவங்குகிறது.

அது ஜார்க்கண்ட் மாநிலம் பிரியாத ஒன்றுபட்ட பீகார். 350க்கும் மேற்பட்ட சட்டசபை தொகுதிகளையும், 53 மக்களவைத் தொகுதிகளையும் கொண்ட நாட்டின் இரண்டாவது பெரிய மாநிலம். அதேசமயம், மிகவும் பின்தங்கிய மாநிலங்களுள் ஒன்று.

அப்போது அவர் சொல்கிறார், “பீகாரில் அடுத்த 20 ஆண்டுகளுக்கு எங்கள் ஆட்சிதான். 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தேர்தல் என்பது உரிமத்தைப் புதுப்பிக்கும் செயல்பாடு மட்டுமே” என்று.

ஆனால், அவரால் 15 ஆண்டுகள் மட்டுமே கோலோச்ச முடிந்தது. கடந்த 1996ம் ஆண்டு ஜனதாதளம் கட்சியில், ஊழலை முன்வைத்து அவருக்கு சரத் யாதவ் போன்றவர்கள் நெருக்கடி கொடுத்தபோது, பெரும்பான்மைக்குத் தேவையான சட்டமன்ற உறுப்பினர்களை அலேக்காக அள்ளி, பீகாரில் ஜனதாதளத்தில் பெரிய உடைப்பை ஏற்படுத்தி, ராஷ்ட்ரிய ஜனதாதளம் என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கி, ஆட்சியைத் தொடர்ந்தார் லாலு பிரசாத்.

ஒரு கட்டத்தில், தனக்கு நெருக்கடி அதிகரிக்கவே, சமையலறையும், மாட்டுத் தொழுவமுமே கண்ணாய் இருந்த தனது மனைவி ராப்ரி தேவியை முதல்வராக்கி, இந்திய அரசியலை அதிர வைத்தார்.

கடந்த 2000ம் ஆண்டு தேர்தலில் இவருக்குப் பெரும்பான்மை கிடைக்காமல் போகவே, 20க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டிருந்த காங்கிரசை கூட்டணிக்குள் இழுத்து, 2005 வரை கூட்டணி ஆட்சி நடத்தினார். பிறகு, 2005ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தோற்றுப் போனார்.

அதன்பிறகு, பீகார் அரசியலில், அதே ஜனதாதளத்தின் மற்றொரு பிரிவைச் சேர்ந்த நிதிஷ்குமாரின் யுகம் தொடங்கியது. இடையில், 2015 முதல் 2017ம் ஆண்டு வரை நிதிஷ்குமார் தலைமையிலான அரசில் லாலுவின் கட்சி இடம்பெற்றிருந்தது.

இடையில் சில மாதங்கள் இடைவெளி தவிர்த்து, மொத்தமாக 15 ஆண்டுகளை முதல்வர் பதவியில் கழித்துள்ளார் நிதிஷ்குமார். இதோ இப்போது, நான்காவது முறையாகவும் பீகார் முதல்வராக பதவியேற்கவுள்ளார். இந்த ஆட்சிகாலத்தை, நிதிஷ்குமார் முழுவதுமாக நிறைவுசெய்தால், பீகார் முதல்வர் நாற்காலியில் தொடர்ந்து 20 ஆண்டுகள் அமர்ந்தவர் என்ற சாதனையைப் படைப்பார்!

1990ம் ஆண்டு ஆட்சியைப் பிடித்ததும், தொடர்ந்து 20 ஆண்டுகள் அதிகாரத்தில் இருக்க ஆசைப்பட்டார் லாலு பிரசாத். ஆனால், அவரின் ஆசை 15 ஆண்டுகள் மட்டுமே நிறைவேறியது.

ஆனால், லாலு பிரசாத்தைப் போல் எந்த வசனத்தையும் பேசாத நிதிஷ்குமாருக்கு, அதிகாரத்தில் தொடர்ந்து 20 ஆண்டுகள் அமரும் வாய்ப்பு கிடைத்துள்ளது!