சஞ்சய் காந்தி சர்க்கரை ஆலை ஊழியர் ஊதிய பாக்கி : மேனகா காந்தி செவி சாய்ப்பாரா?

சுல்தான்பூர், உத்திரப்பிரதேசம்

த்திய அமைச்சர் மேனகா காந்தி தனது கணவரின் கனவு திட்டமான சர்க்கரை ஆலை ஊழியர்க்ளுக்கு 22 மாத ஊதிய பாக்கி நிலுவையில் உள்ளது.

கடந்த 1973 ஆம் வருடம் இந்திரா காந்தியின் இளைய மகன் சஞ்சய் காந்தி அரசியல் உலகில் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்தார்.    அவர் அப்போது மாருதி என்னும் சிறிய வகை கார்களை தயாரிக்கும் முயற்சியில் வெற்றியை கண்டு வந்தார்.     இது பலரையும் கவர்ந்தது.   உத்திரப்பிரதேசத்தில் உள்ள சுல்தான்பூரில் உள்ள ஷகில் அகமது என்பவர் சஞ்சய் காந்தியின் புதிய சர்க்கரை ஆலை திட்டத்துக்கு தனது 10 ஏக்கர் நிலத்தை அளித்தார்.

ஆனால் மாருதி தொழிற்சாலை மற்றும் இந்த சர்க்கரை ஆலை ஆகியவை வர்த்தகத்தில் இறங்கும் போது சஞ்சய் காந்தி விமான விபத்தில் இறந்து 3 ஆண்டுகள் ஆகி விட்டன.   கடந்த 1983 ஆம் வருடம் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி சுல்தான்பூரில் அமைக்கப்பட்ட இந்த ஆலைக்கு சஞ்சய் காந்தியின் பெயரை சூட்டினார்.

மாருதி கடந்த 35 வருடங்களில் மாபெரும் கார் உற்பத்தி தொழிற்சாலையாக வளர்ந்துள்ளது.   ஆனால் சர்க்கரை ஆலைக்கு நிலம் அளித்த ஷகில் அகம்து ஆலையில் ஒரு மெசின் ஆபரேட்டராக பணி புரிந்து வருகிறார்.

தற்போது 47 வயதாகும்  இவர் அந்த ஆலையின் தொழிற்சங்க செயலராக உள்ளார்.    கடந்த 22 மாதங்களாக இந்த சர்க்கரை ஆலையில் உள்ள 800  ஊழியர்களுக்கு ஊதிய பாக்கி உள்ளது.  அதற்காக தினமும் இவர் ஆலை வாயிலில் ஊழியர்களுடன் கூடி போராட்டம் நடத்தி வருகிறார்.    இரு மகன்களும் ஒரு மகளும் உள்ள இவர் குடும்பம் வறுமையில் வாடுகிறது.

தற்போது நடைபெறும் மக்களவை தேர்தலில் இந்த தொகுதியில் மேனகா காந்தி போட்டியிடுகிறார்.   அவர் தனது தேர்தல் பிரசாரத்தின் போது இந்த சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு உதவுவதாக வாக்களித்தார்.    அதன்படி உ பி மாநில அரசு கடந்த 2018 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் வரையிலான ஊதிய பாக்கிக்காக ரூ. 7 கோடி வழங்க உத்திரவாதம் அளித்தது.

கடந்த 2018 ஆம் வருடம் இந்த ஆலை ரூ.380 கோடி லாபம் ஈட்டி உள்ளது.    ஆனால் அதன்  பிறகு சர்க்கரை விலையை பாஜகவின் உ.த்திரப்பிரதேச மாநில அரசு மிகவும் குறைத்ததால் இந்த ஆலைக்கு மிகவும் இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.   மேலும் இந்த ஆலையில் இருந்து கிடைக்கும் லாபத்தை எடுத்துக் கொள்ளும் பாஜக அரசு ஆலையின் முன்னேற்றத்தில் எவ்வித கவனமும் செலுத்தவில்லை எனவும் ஊதியம் தரவும் மறுத்து வருவதாகவும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது மேனகா காந்தியின் வேண்டுகோளுக்கிணங்க ரூ.7 கோடி வழங்குவதாக அறிவித்த மாநில பாஜக அரசு இதுவரை எந்த தொகையையும் அளிக்கவில்லை.    அதனால் ஊழியர்களுக்கு ஊதிய பாக்கி வழங்க இயலாத நிலையில் நிர்வாகம் உள்ளது.    தன் கணவர் பெயரில் உள்ள ஆலை குறித்து மேனகா காந்தி கவனம் கொள்ள வேண்டும் என இந்த ஆலை ஊழியர்கள் காத்திருக்கின்றனர்.