இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அரசின் வெற்றிகரமான ஊரடங்கு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், கொரோனா தாக்கம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், ஆனால், எதிர்வரும் பக்ரீத் மற்றும் மொஹரம் பண்டிகைகள் நிகழ்வுகளில் மக்களின் நடவடிக்கைகளைப் பொறுத்தே நிலைமை அமையும் என்றும் பேசியுள்ளார் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி.
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் அந்நாட்டில் புதிதாக 1487 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாகவும், இதன்மூலம் அந்நாட்டில் மொத்தமாக கொரோனா தொற்றியோரின் எண்ணிக்கை 2,71,886 என்பதாக உயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அமைச்சர் கூறியிருப்பதாவது, “அரசின் நடவடிக்கைகளால், பாகிஸ்தானில் கொரோனா பரவல் என்பது குறிப்பிடத்தக்களவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், எதிர்வரும் பக்ரீத் மற்றும் மொஹரம் பண்டிகை நிகழ்வுகளால் நிலைமை மாறலாம்” என்றுள்ளார்.
பக்ரீத் பண்டிகை ஆகஸ்ட் 1ம் தேதி கொண்டாடப்படுகிறது மற்றும் மொஹரம் பண்டிகையோ, பக்ரீத் முடிந்த 20 நாட்கள் கழித்து அனுசரிக்கப்படுகிறது.
“பாகிஸ்தானில், ஜூலை மாதம் 30 வாக்கில், மொத்தமாக 12 லட்சம் பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்றும், 50000 பேர் மரணமடைந்திருப்பார்கள் என்றும் சில நிபுணர்கள் கணித்திருந்தார்கள். ஆனால், அக்கணிப்பு தற்போது பொய்யாகிவிட்டது” என்றுள்ளார் அமைச்சர்.