இந்தியாவின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் என்று கடந்த சில ஆண்டுகளாக உச்சி முகரப்படுபவர் பும்ரா. ஐபிஎல் தொடரில், மும்பை அணிக்காக ஆடுபவர்.

கடந்த ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் சிறப்பாக செயல்பட்டமைக்காக பாராட்டப்பட்டவர். ஆனால், கடந்தாண்டின் இறுதி & இந்தாண்டின் துவக்கத்தில் இந்திய அணி மேற்கொண்ட நியூசிலாந்து சுற்றுப் பயணத்தில் இவரின் செயல்பாடு மோசமாக அமைந்தது.

தன் உடலை அதிகமாக அலட்டிக்கொண்டு, காயமடைந்து, அதன்மூலம் கோடிகளை கொட்டும் ஐபிஎல் தொடருக்கு எதுவும் பாதிப்பாகி விடக்கூடாது என்பதாக இவர் கவனம் செலுத்துவதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

அந்தக் கருத்தை நிரூபிக்கும் விதமாகவே உள்ளது பும்ராவின் செயல்பாடு. ‍ஐபிஎல் தொடர் நடைபெற்ற அமீரக நாட்டிலுள்ள தட்டையான பிட்சுகளில் சிறப்பாக செயல்பட்டு, மும்பை அணியின் பல வெற்றிகளுக்கு உதவியாக இருந்தார் பும்ரா.

ஆனால், மிக முக்கிய ஆஸ்திரேலிய தொடரில், வேகப்பந்து வீச்சுக்கு சிறப்பாக ஒத்துழைக்கும் ஆஸ்திரேலியப் பிட்சுகளில், கடந்த 2 போட்டிகளிலும் மோசமாக செயல்பட்டுள்ளார் அவர்.

முதல் ஒருநாள் போட்டியில், 10 ஓவர்களை வீசி, 73 ரன்கள் கொடுத்து, 1 விக்கெட்டை மட்டுமே கைப்பற்றினார் பும்ரா. இன்றையப் போட்டியில், 10 ஓவர்களை வீசி 79 ரன்களைக் கொடுத்து 1 விக்கெட் மட்டுமே எடுத்துள்ளார்.

இதற்குப் பெயர்தான் சிறந்த பந்துவீச்சா? வேறு எந்த இந்தியப் பந்துவீச்சாளரும் பெரிதாக சாதிக்கவில்லை என்ற கருத்து இருந்தாலும், அவர்கள் அனைவரையும்விட பெரிதாக கவனிக்கப்படுபவர் மற்றும் நட்சத்திர அந்தஸ்து வழங்கப்படுபவர் இவர். எனவேதான், இந்தக் கேள்வி எழுந்துள்ளது. இனிவரும் போட்டிகளில், இவரின் செயல்பாடுகளை வைத்தே, மேலதிக மதிப்பீடுகள் அமையும்.