ஐதராபாத்: டென்னிஸ் விளையாட்டிற்கு மீண்டும் திரும்ப 2 ஆண்டுகள் உழைப்பைக் கொடுத்துள்ளேன். இது அனைவருக்குமே கடினமான காலம். எனவே, ரசிகர்கள் இல்லாமலும் விளையாட தயாராக உள்ளேன் என்று சோகமாக பேசியுள்ளார் இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்ஸா.

தற்போது ஊரடங்கால் வீட்டில் முடங்கியுள்ள சானியா பேசியிருப்பதாவது, “நான் எப்போதும்போல் உண்கிறேன். ஆனால், இந்த நிலையில் பல்லாயிரம் பேர் வேதனைகளை அனுபவித்து வருகிறார்கள்.

இந்த சூழல் மக்களிடையே மனித நேயத்தையும் அன்பையும் அதிகரித்துள்ளது. டென்னிஸ் குறைந்தபட்சம் 200 நாடுகளில் ஆடப்படுகிறது. இதில், குறைந்தது ஒருநாடு வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தாலும் கடினம்தான்.

மீண்டும் டென்னிஸ் தொடர்கள் எப்படி தொடங்கப்படும் என்பது தெரியவில்லை. கிரிக்கெட்டைப் போன்று, டென்னிஸ் தொடரை எளிதாக நடத்திவிட முடியாது.

மைதானத்திற்குள் நுழையும்போது ரசிகர்கள் அளிக்கும் வரவேற்புக்கு ஈடு இல்லை. ஆனால், இந்த சூழலை கருத்தில்கொண்டு, அவர்கள் இல்லாமல் விளையாடும் நிலை வந்தாலும், அதற்கும் தயார்தான். ஏனெனில், நான் மீண்டும் களத்திற்கு திரும்ப, 2 ஆண்டுகள் கடுமையான உழைப்பை செலுத்தியுள்ளேன்” என்றுள்ளார்.