அமெரிக்கா – ஈரான் இடையே ஏற்பட்டுள்ள தீவிர மோதலில், அமெரிக்கா திடீரென அடக்கி வாசிக்கக் காரணங்களாக பலவும் கூறப்படுகின்றன. அதில் முக்கியமானது அந்நாட்டு நாடாளுமன்றம், ராணுவத் தலைமையகம் மற்றும் வேறுபல தளங்களில் எழுந்துள்ள எதிர்ப்புகள்.

இந்த எதிர்ப்புகள் எத்தகையக் காரணங்களுக்காக எழுகின்றன என்பதைக் குறித்தப் புரிதல் பலருக்கும் தெளிவான ஒன்றாக இருக்குமா? என்பது சந்தேகமே.

கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், சிரியா விஷயத்தில் ரஷ்யாவுடன் போர் வேண்டாமென்ற கருத்தைக் கொண்டிருந்த முதலாளித்துவ தரப்பினர் டொனால்ட் டிரம்ப்பையும், சிரியாவை முழுமையாகக் கைப்பற்ற ரஷ்யாவுடன் நேரடி போரில் இறங்கினாலும் பரவாயில்லை என்ற கருத்துக்கொண்டிருந்த முதலாளித்துவ தரப்பினர் ஹிலாரி கிளிண்டனையும் ஆதரித்தனர். (டொனால்ட் டிரம்ப் ஒரு மோசமான பிற்போக்குவாதி. ஆனால், ஹிலாரி கிளிண்டன் ஒரு முற்போக்கான ஜனநாயகவாதி என்று கடந்த அமெரிக்க அதிபர் தேர்தல் சமயத்தில் கிளப்பிடவிடப்பட்ட பிரச்சாரங்கள் எல்லாம் நகைச்சுவை ரகம்!)

ஏனெனில், அமெரிக்காவில் ஆயுத உற்பத்தியாளர்கள் மட்டுமே முதலாளிகள் அல்லர்; பலதரப்பு முதலாளிகளும் உள்ளனரே! அவர்கள் பல நாடுகளில் பல அம்சங்களில் முதலீடு செய்திருப்பவர்கள். எனவே, முதலாளிகளின் பிரதிநிதிகளாக உள்ள அந்நாட்டு அதிபர்களால், நினைத்த நேரத்தில் நினைத்த நாடுகளின் மீதெல்லாம் பாய்ந்துவிட முடியாது.

ஜார்ஜ் புஷ் காலத்தில் தொடர் போர்கள் நடைபெற காரணம், அவரின் குடும்பமே ஆயுத வியாபாரப் பின்னணியைக் கொண்டதால்தான்.

அந்தந்த நாடுகளின் அரசமைப்பு முறைகள் மற்றும் அரசியல் சூழல்கள், பிராந்திய சூழல்கள்(அண்டை நாடுகள் உள்ளிட்டவை) ஆகியவற்றை மையமாகவே வைத்தே அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளின் ஆதிக்கவாத செயல்பாடுகள் அமைகின்றன.

லிபியா மற்றும் சிரியா உள்ளிட்ட நாடுகளில் கிளர்ச்சிப் படைகளை உருவாக்கிய அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் நேரடியாகவே களத்தில் இறங்கியது. ஆனால், குட்டிநாடான வடகொரியா விஷயத்தில் அமெரிக்காவால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மோதலில் இறங்க முடியாமல் போவதற்கு, வடகொரியாவின் அரசியல் சூழலைவிட, அதன் பிராந்திய சூழலே முதன்மைக் காரணம்.

அமெரிக்காவுக்கு மிகவும் வேண்டப்பட்ட தென்கொரியா மற்றும் ஜப்பான் உள்ளிட்டவை அண்டை நாடுகளாக இருப்பது மட்டுமல்ல, அமெரிக்காவின் ஆதிக்கப் போட்டியாளரான சீனா, அங்கே இருப்பதும் மிகப்பெரிய ஒரு தடைக்கல்!

வடகொரியா விஷயத்தில் ஏடாகூடமாக எதையும் செய்யத் துணிந்தால், தென்கொரியா மற்றும் ஜப்பான் உள்ளிட்டவை காலியாகும் என்பதோடு, சீனாவும் களத்தில் இறங்கிவிடும். ஏனெனில், தனக்கு உவப்பில்லாத அமெரிக்கா – தென்கொரியா – ஜப்பான் கூட்டணியை சமாளிக்க, சீனாவின் கைவசம் உள்ள மிகப்பெரிய துருப்புச்சீட்டுதான் இந்த வடகொரியா! தனது துருப்பூச்சீட்டை நழுவவிட ஒருபோதும் துணியாது சீனா.

எனவேதான், வடகொரியா விஷயத்தில் பற்களை நரநரவென கடித்து, அந்தப் பற்கள் தேய்ந்து உடைந்தே போனாலும்கூட, அமெரிக்கா பொக்கை வாயாக இருக்கலாமே ஒழிய, வடகொரியாவை கடிக்கவெல்லாம் முடியாது!

தற்போது, ஈரான் விஷயத்திலும் கிட்டத்தட்ட இதே நிலைமைதான். ஈரானின் தலைமை தளபதியையே யோசிக்காமல் டக்கென்று சாகடித்துவிட்டாலும், அந்நாட்டின் மீது போர் தொடுப்பதென்பது ஒரு இடத்தில் தேள்கொட்டி பல இடங்களில் நெறி கட்டியக் கதையாகிவிடும் அமெரிக்காவுக்கு..!

வடகொரியா விஷயத்திலாவது தென்கொரியா மற்றும் ஜப்பான் என்ற 2 வேண்டப்பட்ட நாடுகள்தான்! ஆனால், ஈரான் விஷயத்திலோ, சவூதி, குவைத், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், மஸ்கட், ஜோர்டான், துருக்கி, இஸ்ரேல் உள்ளிட்ட பல நாடுகள். (இப்பட்டியலில், இஸ்ரேல் லேசுப்பட்ட நாடல்ல என்பது வேறொரு விவாதக் களம்). மேற்சொன்ன அனைத்து நாடுகளையும் ஈரான் தாக்கிவிடும். இவற்றில் மிகப்பல நாடுகள் எண்ணெய் வளம் கொழிப்பவை.

ஈரானோடு அமெரிக்கா போர் செய்யப்போய், இந்த நாடுகளையெல்லாம் ‘வருவது வரட்டும், போவது போகட்டும்’ என்ற ரேஞ்சுக்கு சகட்டுமேனிக்கு ஈரான் தாக்கத் தொடங்கினால் நிலைமை வேறுமாதிரி ஆகிவிடும் அமெரிக்காவுக்கு!

எனவேதான், திமிறிக்கொண்டிருக்கும் டிரம்ப்பின் கைகால்களைப் பிடித்து பின்னால் இழுத்துக் கொண்டிருக்கிறார்கள் அமெரிக்காவின் முதலாளிமார்கள் பலர்!

இதில் இன்னொரு விஷயத்தையும் யோசிக்க வேண்டியுள்ளது. ஒரு மோசமான காலகட்டத்தில், மோசமான ஒரு பிராந்தியத்தில், தனது நாட்டின் அதிஉயர் தளபதி ஒருவரின் பாதுகாப்பு விஷயத்தில் ஈரான் இவ்வளவு அசட்டையாக இருந்துள்ளதே..! என்பதுதான் அது.

வடகொரியா விஷயத்தில் குறுக்கிடாத வணிக நலன், ஈரான் விஷயத்தில் அதிகம் குறுக்கிடுவதால், அமெரிக்காவின் துள்ளல் மத்திய கிழக்கில் சற்று அதிகம்தான். ஆனால், அந்தத் துள்ளல் தடுமாறி கீழே சாய்ந்துவிடாத துள்ளலாகவே இருக்கும்..! இருக்கவும் வேண்டும். அதுதான் நமக்கும்கூட நல்லது!

– மதுரை மாயாண்டி