கேதார் ஜாதவிடம் தோனி  கண்ட ஸ்பார்க் என்ன? :  ஸ்ரீகாந்த் காட்டம்

துபாய்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனியின் வீரர் தேர்வு குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் 2020 போட்டியில் அனைவரும் வெற்றி பெறும் என எதிர்பார்த்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை நோக்கிச் சென்றுக் கொண்டு இருக்கிறது.   இதில் பெரும்பாலானோர் வயதானவர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களாக உள்ள நிலையில் இளைஞர்கள் இதை டாடிஸ் ஆர்மி (தந்தையர் அணி) எனக் கிண்டல் செய்து வருகின்றனர்.

நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக 7 விக்கட் இழப்பில் சென்னை அணி படு தோல்வி அடைந்தது.   இளம் தலைமுறை வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், தமிழக வீரர் ஜகதீசன் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு அளிக்காதது குறித்து தோனி இளம் வீரர்களிடம் எவ்வித ஒரு ஸ்பார்க் (பொறி) தென்படவில்லை எனக் கூறினார்.

ரசிகர்கள் இடையே இது கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரரும் தற்போதைய கிரிக்கெட் வர்ணனையாளருமான ஸ்ரீகாந்த், “இளைஞர்களிடம் ஸ்பார்க் எதுவும் இல்லை எனக் கூறும் தோனி கேதார் ஜாதவுக்கு  தொடர்ந்து வாய்ப்பு அளிக்கிறார்.  அவரிடம் தோனி என்ன ஸ்பார்க்கை கண்டார்?

எப்போதும் தோனி புரோசஸ், புரோசஸ் என கூறுகிறார். இதை நான் ஒரு போதும் ஏற்க மாட்டேன்.  அவர் அர்த்தமில்லாமல் தொடர்ந்து புரோசஸ் என பேசி வருகிறார். ஆனால் அணித்தேர்வு புரோசசில் கோட்டை விட்டு விடுகிறார்.” என விமர்சித்துள்ளார்.   இதே கருத்தைப் பல நெட்டிசன்களும் தெரிவித்து தோனியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.