ஏரிகளின் கொள்ளளவை உயர்த்த என்ன செய்தீர்கள்? அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு ஹைகோர்ட் ஆணை

சென்னை: சென்னையில் உள்ள 12 ஏரிகளின் கொள்ளளவை அதிகப்படுத்த எடுத்த நடவடிக்கைகளை அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில பரவலாக மழை கொட்டி வருகிறது. சென்னை, கோவை, நீலகிரி என பல மாவட்டங்களில் மழை பெய்தது.

மழையின் காரணமாக ஏரிகளில் நீர்மட்டம் மெதுவாக உயர்ந்து வருகிறது.  கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு அதிகளவு தண்ணீர் வருவதால், நீரின் இருப்பு அதிகரித்து வருகிறது.

இதையடுத்து, சென்னை குடிநீர் தேவைக்காக புழல், செம்பரம்பாக்கம் ஏரிக்கு  தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், வீராணம் உள்ளிட்ட 5 ஏரிகளில் தற்போதுள்ள உள்ள தண்ணீரை கொண்டு சென்னையில் 6 மாதத்துக்கு தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும்.

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைவதால் ஏரிகளில் நீர்மட்டம் மேலும் உயரும் என்று கணிக்கப்படுகிறது. சென்னையில் உள்ள 12 ஏரிகளின் கொள்ளளவை அதிகப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் என்ன என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இது தொடர்பாக, வரும் 4ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.