சிறையில் ராம்குமார் மரணம் குறித்த ஆர்டிஐ கேள்விகளுக்கு சிறைத்துறை அளித்த பதில் என்ன தெரியுமா?

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார், சிறையில் மரணமடைந்தது குறித்து ஆர்.டி.ஐ. மூலம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாது என்று சிறைத்துறை பதில் அளித்துள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், இன்ஜினீயர் சுவாதி படுகொலை செய்யப்பட்ட சம்பவம், ஒட்டுமொத்த தேசத்தையும் அதிரவைத்தது. இந்த வழக்கில், நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.

பின்னர் இவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவர் மின்வயரைக் கடித்து தற்கொலை செய்துகொண்டதாக சிறைத்துறை தெரிவித்தது. சுவாதி கொலை வழக்கு, ராம்குமார் தற்கொலை வழக்கு ஆகியவற்றில் பல சந்தேகங்கள் எழுந்தன. அதற்கு இன்றுவரை விடை கிடைக்கவில்லை.

இந்த நிலையில் ராம்குமார் தற்கொலை வழக்கு குறித்து நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞரும் ஆர்டிஐ போராளியுமான பிரம்மா, தமிழக உள்துறைச் செயலாளர் அலுவலகத்துக்கு ஆர்டிஐ மூலம் கடந்த மே மாதம் கேள்விகளை அனுப்பியிருந்தார்.

அதில், தமிழகத்தில் உள்ள சிறைக்கைதிகளின் விவரம், கைதிகள் மரணமடைந்த விவரம், தற்கொலை செய்துகொண்ட கைதிகளின் பெயர்கள், மின்சாரம் தாக்கி இறந்த கைதிகளின் விவரம், சென்னை புழல் சிறையில் ராம்குமார் தற்கொலை வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை உள்ளிட்டவை குறித்த கேள்விகளை கேட்டிருந்தார்.

இதற்கு சென்னை புழல் பெண்கள் சிறை நிர்வாகம் மட்டுமே பதில் அளித்துள்ளது. ராம்குமார் தொடர்பான கேள்விகளுக்கு சிறைத்துறை பதிலளிக்கவில்லை.

இதுகுறித்து வழக்கறிஞர் பிரம்மா, “தமிழ்நாட்டில் உள்ள சிறைகளில் இருக்கும் சிறைவாசிகளின் விவரம்குறித்து ஆர்டிஐ-யில் கேள்விகளைக் கேட்டிருந்தேன். சென்னை, புழல் பெண்கள் சிறை நிர்வாகம் மட்டுமே இதற்கு பதில் அளித்துள்ளது. புழல் ஆண்கள் சிறை நிர்வாகம் ராம்குமார் குறித்த கேள்விகளுக்குப் பதிலளிக்கவில்லை.

பெண்கள் சிறையில் பணியாற்றிய இரண்டாம் நிலைக் காவலர் நிர்மலா, சிறைக்குள் மறைத்துவைத்திருந்த மூக்குப்பொடி மற்றும் பான்பராக் ஆகியவை கண்டுப்பிடிக்கப்பட்டதை அடுத்து அவர் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டார். ஆறு மாத ஊதிய உயர்வும் அவருக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.

ஆச்சியம்மாள் என்ற கைதி தற்கொலைசெய்துகொண்டது தொடர்பாக, சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர்களிடமிருந்து ஒரு லட்சம் ரூபாய் பிடித்தம்செய்து, சிறைவாசியின் உறவினரிடம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் மற்ற பல கேள்விகளுக்கு சிறைத்துறை நிர்வாகம் பதிலளிக்கவில்லை’’ என்று பிரம்மா தெரிவித்தார்.