மணமாகாத அபார்ட்மென்ட் வாசிகளின் விபரங்கள் சேகரிப்பா? – பெங்களூரு நிலவரம் என்ன?

--

பெங்களூரு: கர்நாடக தலைநகரின் ஒய்ட்ஃபீல்டு பகுதியிலுள்ள ஒரு அடுக்கமாடி குடியிருப்பின் நிர்வாகம், காவல்துறையின் அறிவுறுத்தல் என்ற பெயரில் வெளியிட்டதாக கூறப்படும் ஒரு நோட்டிஸ் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, அந்த அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசிக்கும் மணமாகாத இளைஞர்கள் மற்றும் நபர்களின் விபரங்களை, குடியிருப்பு வாசிகள் அளிக்க வேண்டுமென அந்த நோட்டிஸில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அந்த நோட்டீஸின் ஒரு ஸ்கிரீன்ஷாட் வெளியாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, தனியாக வசிக்கும் மணமாகாத நபர்களின் பெயர், தொடர்பு எண்கள் மற்றும் அவர்களின் வாகன எண்கள் உள்ளிட்ட விபரங்கள் கேட்கப்பட்டுள்ளன. அத்தகைய நபர்கள், போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதால் இந்த நடவடிக்கை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும் அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், இந்த நோட்டீஸுக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லையென்று பெங்களூரு மாநகர காவல்துறை ஆணையர் மறுத்துள்ளார். ஏனெனில், காவல்துறை அப்படி யாரையும் கண்காணிக்க நினைத்தால், காவல்துறை எந்த வழியிலும் அதனை மேற்கொள்ள முடியும் என்றும், இப்படியான வழிமுறை அவசியமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

எந்தக் காவல் அதிகாரியும் இப்படியான ஒரு விபரமற்ற செயலை செய்யும் வகையில் இல்லை என்று கூறியிருப்பதோடு, அந்த குறிப்பிட்ட அடுக்குமாடி குடியிருப்பின் நிர்வாகம் யார் என்பதை அடையாளம் காண வேண்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.