எந்த ஒருவரையுமே, அவரின் தகுதி மற்றும் திறமைகளுக்கு அப்பாற்பட்டு, பிரபலமாக்குவதை சிரமேற்கொண்டு, தாங்கள் கைக்கொண்டிருக்கும் அஜெண்டாவிற்கேற்ப செய்து வருபவை வெகுஜன மீடியாக்கள்!

நவீன டிஜிட்டல் யுகத்தில் விளம்பரங்களுக்கான தளங்கள் வெகுவாக விரிவடைந்திருந்தாலும், வெகுஜன மீடியாக்களின் சக்தி என்பது குறையாமல்தான் இருந்து வருகிறது. அந்த ரக மீடியாக்களின் தற்போதைய அஜெண்டா ரஜினிகாந்த்!

கடந்த 1967ம் ஆண்டு தொடங்கி, தற்போது வரை, தமிழக அரசியல் மற்றும் நிர்வாகத்தில் ஒரே ஊழல், ஒரே நிர்வாகச் சீர்கேடு மற்றும் ஒரே மோசடி மயம்தான்! என்ற பிரச்சாரம் கடந்த சில ஆண்டுகளாகவே வெகுஜன மீடியாக்களின் ஆதரவுடன் தொடர்ந்து சிலரால் செய்யப்பட்டு வருவது, என் காதுகளிலும் கொய்ய்ய்……..யென்று ஒலித்ததால், அப்படி என்னதான் இந்த அரைநூற்றாண்டில் சீர்கேடு நடந்தது என்று நானும் முடிந்தவரை அதையும் இதையும் தேடிப் படித்து, சில விபரஸ்தர்களைக் கேட்டு உண்மையை அலசியபோது, எனக்கு அகப்பட்ட தகவல்களை மிகச் சுருக்கமாக உங்களுக்கும் சொல்கிறேன்.

ஊழல், சீர்கேடு, பித்தலாட்டமெல்லாம் இந்த அரைநூற்றாண்டில் இருந்தும், வேறு நல்ல விஷயங்கள் என்னவெல்லாம் நடந்தது என்பதை அறிந்தபோது என்னால் ஆச்சர்யப்படாமல் இருக்க முடியவில்லை.

* கடந்த 1970களின் துவக்கத்திலேயே தமிழகத்தை முற்றிலும் மின்மயமாக்கியது

* பொது விநியோகத் திட்டத்தை(ரேஷன் பொருள் விநியோகம்) செம்மையாக்கி, பரவலாக்கி, எளிமையாக்கியது

* அரிசிக்காக, சுயமரியாதையை இழந்து, பண்ணையார்களிடம் மக்கள் கைக்கட்டி நின்ற அவலத்தைப் போக்கியது

* தமிழகத்தில் நல்ல சாலை வசதிகளையும், சிறந்த போக்குவரத்து இணைப்புகளையும் ஏற்படுத்தியது

* 69% சமூகநீதி இடஒதுக்கீட்டை ஏற்படுத்தி, சமூகத்தின் பலதரப்பு மக்களையும் அதிகார மற்றும் கல்வி மட்டங்களில் பங்கெடுக்க வைத்தது

* பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வழங்கியது

* கடைநிலை கிராமம் முதல் மாநகரங்கள் வரை, சிறந்த மருத்துவக் கட்டமைப்‍பை ஏற்படுத்தியது

* ஒரு குறிப்பிட்டப் பகுதியை மட்டுமே மையப்படுத்தாமல், தமிழகத்தின் பல பரவலான இடங்களில் தொழில் வளர்ச்சியை உண்டாக்கியது

* தமிழகத்தில் கிட்டத்தட்ட 60% நகர்ப்புற பொருளாதார கட்டமைப்பை உண்டாக்கியது

* முற்றிலும் வேளாண் பொருளாதாரத்தை மட்டுமே நம்பியிராமல், சார்பு பொருளாதார வாய்ப்புகளை ஏற்படுத்தி, வேளாண்மை சார்ந்த தற்கொலைகளை ஒப்பீட்டளவில் மிகவும் குறைத்தது

* சிறிய பேரூராட்சிகள், பெரிய பேரூராட்சிகள், சிறிய நகராட்சிகள், பெரிய நகராட்சிகள், சிறிய மாநகராட்சிகள் மற்றும் பெரிய மாநகராட்சிகள் என்று கூறும் வகையில், நகர்ப்புற கட்டமைப்புகளை ஏற்படுத்தி, மக்களின் பொருளாதார தற்சார்பு வாய்ப்புகளை அதிகப்படுத்தியது

* தள்ளாடிக் கொண்டிருந்த மதிய உணவு திட்டத்தை வலுப்படுத்தி, அதை சத்துணவு திட்டமாக்கி, பின்னாளில் அதை பள்ளிக் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானதாக்கியது

* சஞ்சய்காந்தி போன்றவர்கள் ஆச்சர்யப்படும் வகையில், குடிசை மாற்று வாரியம் என்ற ஒன்றை ஏற்படுத்தி, குடிசைப் பகுதி மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகளை ஏற்படுத்தியது

* தனிமனிதனின் சுயமரியாதைக்கு இழுக்கு என்று கை ரிக்சாக்களை ஒழித்தது

* அதிக கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை உருவாக்கியது

* பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வியில் தமிழகத்தை மேம்பட்ட மாநிலமாக மாற்றியது

* பல நீர்ப்பாசன திட்டங்களை மேற்கொண்டது

* ஒரேவிதமான தொழில்துறையை சார்ந்திராமல், பல்வகைத் தொழில்களுக்கான களமாக தமிழகத்தை மாற்றி வலுவான பொருளாதாரமாக ஆக்கியது

* பெண்களுக்கு திருமண உதவித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு சமூக நலத் திட்டங்களை செயல்படுத்தியது

* பேருந்துப் போக்குவரத்தை அரசுடைமையாக்கியது

* வங்கிகளை தேசியமயமாக்கும் இந்திரா காந்தி அரசின் நடவடிக்கைக்கு உறுதுணையாய் இருந்தது

* சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றியது

* சுயமரியாதை திருமணச் சட்டம் இயற்றியது

* தமிழ்நாட்டில் சிறந்த மொழியுணர்வை ஏற்படுத்தியது

* சிறந்த நீர்வள ஆதாரமோ, வலுவான முதலீட்டு(பணம்) சமூகங்களோ இல்லாத நிலையிலும், தமிழகத்தை ஒரு முன்னேறிய மாநிலமாக மாற்றிக் காட்டியது

* நல்ல குடிநீர் வசதியை ஏற்படுத்தியது

* மாநிலங்களின் அதிகாரத்தை வலுப்படுத்த குரல் கொடுத்து, மைய அரசின் அடக்குமுறையை எதிர்த்து நின்றது

என்பதான நிறைய பதிவுகள் என்னிடம் வந்து விழுந்தன. என் தேடல்களில் சிக்காமல் போன ஆக்கப்பூர்வ விஷயங்கள் பல இருக்கலாம்தான். இந்த விபரங்களின்படி பார்த்தால், இந்தியாவின் பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், மிகச்சில டாப் மாநிலங்களில் தமிழகம் மிக முக்கியமானது!

சரி, இந்த 1967க்கு முன்னர் பொற்காலம், அதற்குப் பின்னர் இருண்டகாலம் என்ற கருத்தாக்கத்தை முதன்முதலில் உலவவிட்டது யார் என்று விசாரித்தால், ‘துக்ளக்’ சோ ராமசாமி என்ற தகவல் கிடைத்தது. மோடியின் குஜராத்தை அமெரிக்காவோடு ஒப்பிட்டுப் பிரச்சாரம் செய்துவந்தாரே, அந்த பிராண்ட் அம்பாஸிடரேதான்! என்ற தகவல் கிடைக்க, எனக்குப் புரிந்துபோனது.

சோ ராமசாமியின் பின்புலம் மற்றும் அவரின் கருத்தியல் குறித்தெல்லாம் இந்த இடத்தில் பேசி நேரத்தை வீணாக்க வேண்டியதில்லை.

தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளில் அடையப்பட்ட அம்சங்கள், இந்திய ஒன்றியத்தின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு, பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் அடையப்பட்டவை என்பதும், இந்த 53 ஆண்டுகளிலும் தீவிர திராவிடக் கட்சியான திமுக ஆண்டது வெறும் 21 ஆண்டுகள்தான் என்ற விஷயமும் எனக்கு கூடுதல் ஆச்சர்யம் அளித்தவை..!

இவற்றையெல்லாம் ஒப்புக்கொண்டு, இந்த வளர்ச்சிப் போதாது, இது ஒரு குறிப்பிட்ட அளவோடு தேங்கிவிட்டது, இதிலிருந்து அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச்செல்ல ஒரு புதியதொரு முயற்சி தேவை, அதன்பொருட்டு திராவிடக் கட்சிகளை ஒழிக்க வேண்டும் என்றால், அதைப்பற்றி நாம் வேறுகோணத்தில் விவாதிக்கலாம்.

ஆனால், கடந்த 50 ஆண்டுகாலமாக சீரழிந்த தமிழகத்திற்கு சரியான மாற்று தலைமை தேவையென்ற கோஷத்தை முன்வைப்பவர்கள் பேசுவது வேறு ரகமாகவல்லவா இருக்கிறது..! ‍ஒருவேளை, மேற்கண்டதையெல்லாம் வளர்ச்சி என்பதாக அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லையா அல்லது அப்படிப்பட்ட வளர்ச்சி நடவடிக்கைகளே கூடாது என்கிறார்களா..? நரேந்திர மோடி – அமித்ஷா பாணியிலான வளர்ச்சி நடவடிக்கைகளை ஆதரிப்பவர்களா அவர்கள்..?

தெளிவும் திடசிந்தனையும் நேர்மையும் கொண்ட ரஜினிகாந்த், தன் வட்டத்தில், பாலம் கல்யாணசுந்தரம், ஓடந்துறை சண்முகம் மற்றும் பொன்ராஜ் போன்றவர்களை வைத்திருக்கிறார்.

இவர்களையெல்லாம் வைத்து சமூக மாற்றத்தை ஏற்படுத்துவார் என்கிறார்கள் அவர்கள்! ரஜினிகாந்தின் வட்டத்தில் இருப்பவர்களைப் பற்றி இங்கே நாம் பேச விரும்பவில்லை.

ஆனால், தெளிவு, திடசிந்தனை மற்றும் நேர்மை என்ற அடையாளங்களுக்குள் நடிகர் ரஜினிகாந்தை கொண்டுவருகிறார்களே! அது நம்மை ரொம்பவே உறுத்துகிறது! இந்துத்துவ வலதுசாரி சிந்தனை கொண்டவர் ரஜினிகாந்த்! என்ற அவரின் அடையாளம் இவர்களுக்கு மிகவும் பிடித்தமானது என்ற ஒரு விஷயம் வெட்டவெளிச்சமானது என்றாலும், சமூக நலன் தொடர்பான அந்தத் தெளிவு, திடசிந்தனை மற்றும் நேர்மை என்ற வார்த்தைகள்தான் ரஜினிக்கு கொஞ்சமும் செட்டாகமாட்டோம் என்கின்றன!

தான் 45 ஆண்டுகளாக இருந்துவரும் திரைத்துறையில், அவர் எந்தளவிற்கு நேர்மையாக இதுவரை இருந்துள்ளார் என்பதைக் கண்டறிய தனிப்பட்ட ஆய்வுகள் தேவையில்லை.

தன் படத்தை எப்படி வெற்றிகரமாக ஓடவைப்பது, சினிமாவில் தன் இமேஜை எப்படி தக்கவைத்துக் கொள்வது, தான் சம்பாதித்த பணத்தை எப்படி சிறந்த முறையில் முதலீடு செய்து பாதுகாப்பது உள்ளிட்ட விஷயங்கள் நீங்கலாக, சமூக நிகழ்வுகள் வரலாறு சார்ந்த விஷயங்களை தேடிப் படிக்கும் அளவிற்கெல்லாம் தெளிவான ஆள் இல்லை நம் சூப்பர் ஸ்டார் என்பது சற்று விபரம் அறிந்தவர்களுக்கு இருக்கும் பொதுவானப் புரிதல்.

என்னதான் அரைவேக்காடு அறிவுஜீவிகளால் தப்புதப்பாக சொல்லிக்கொடுக்கப்பட்டதைப் பேசினாலும், தெளிவும் திடசிந்தனையும் கொண்ட ஒரு மனிதர் கொஞ்சமேனும் எச்சரிக்கையாக இருத்தல் வேண்டாமா..!

கடந்த 1971ம் ஆண்டு காசுகளில் விற்றுக்கொண்டிருந்த (இன்றும் நியூஸ் பிரின்ட் தாளில் வெளிவருகிற) துக்ளக் பத்திரிகை, ரூ.10க்கு விற்றது என்று பேசியதைத்தான் சொல்ல வருகிறோம்!

அதே 1970களில், பெங்களூருவில் ஒரு பேருந்து நடத்துனராக, கண்ணும் கருத்துமாக சில்லறைகளை எண்ணி பயணிகளிடம் கொடுத்துக் கொண்டிருந்த ரஜினிக்கு, தனது மகள் திருமணத்தையொட்டி, தங்களையே அர்ப்பணித்து தன்னை குபேரனாய் வாழவைத்துக் கொண்டிருக்கும் ரசிக சிகாமணிகளுக்காக, தனது ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் கேவலம், ஒருவாய் கறிசோறு போடுவேன் என்று சொல்லி, பின்னர் அந்த அற்ப விஷயத்தை செய்தால்கூட தனது கோடிகளின் கட்டுமானத்தில் சிறிய தேய்வு ஏற்பட்டுவிடும் என்று கணக்குப் பார்த்து தயங்கிப் பின்வாங்கிய ரஜினிக்கு, 1971ம் ஆண்டில், ரூ.10 என்பதன் மதிப்பு என்னவென்பது எப்படித்தான் தெரியாமல் போனதோ..!

இன்னும்கூட, அரசியல் என்பதைப் பற்றி ஓரளவு யூகித்து, ரஜினிகாந்த் உஷாராக தொடர்ந்து பின்வாங்கிக் கொண்டுதான் இருக்கிறார். ஏனெனில், தான் சம்பாதித்த செல்வத்தையோ, தனது இமேஜையோ எள்ளளவும் டேமேஜ் செய்துகொள்ள அவர் இன்னும் விரும்பவில்லை என்ற காரணம்தான் அது!

ஆனால், அவரை முன்னிறுத்தி எதையேனும் செய்துவிட முடியாதா? என்று துடிப்பவர்கள்தான், இது…அது….என்று எதையேனும் கிளப்பி விடுகிறார்கள் அல்லது அவருக்கு அவ்வப்போது எதையாவது ஏடாகூடாமாக சொல்லிக்கொடுத்து பேச வைக்கிறார்கள். ஒருவேளை இவர்கள் சரியாக சொல்லிக்கொடுப்பதை அவர்தான் ஏடாகூடமாக பேசி விடுகிறாரோ என்று நாம் லேசாக யோசித்தால்,

இத்தனையாண்டு காலமாக சினிமா வசனம் பேசுபவருக்கு, சிறிய விஷயங்களைக்கூட மனப்பாடம் செய்து பேசத் தெரியாதா? என்ற எதிர்கேள்வியும் உடனடியாக வந்து விழுந்து விடுகிறது.

சரி, எதுவாகவோ இருந்துவிட்டுப் போகட்டும்.

அரசியல் என்பது எப்போதுமே வெற்றிடத்திற்கு இடமளிக்காத ஒரு அம்சம்! அதிலே வெற்றிடம் இருக்கிறது என்ற மட்டமான புனைவைத் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கும் அவர்கள், 1967க்கு பிறகான காலகட்டம் இருண்ட காலம் என்ற பிரச்சாரத்திற்கான தகுந்த ஆதாரத் தரவுகளை தருவார்கள் என்று நாம் எதிர்பார்ப்பது, அவுட்லுக் பத்திரிகை, இந்து குழுமத்திலிருந்து வெளிவரும் கதையாகவே இருக்கும்..!

 

– மதுரை மாயாண்டி