சென்னை: தமிழகத்தின் இடஒதுக்கீட்டு கொள்கைக்கு பங்கம் வராமல், அண்ணா பல்கலைக்கான சிறப்பு அந்தஸ்தை தமிழக அரசு ஏற்கலாம் என்றுள்ளார் அப்பல்கலையின் துணைவேந்தர் எம்.கே.சூரப்பா.
“தமிழ்நாட்டில் மட்டுமே மொத்தம் 69% இடஒதுக்கீடு உள்ளது. எனவே, தனது இடஒதுக்கீட்டு உரிமைய‍ைப் பாதுகாத்துக் கொள்வதை ஒரு நிபந்தனையாக முன்வைத்து, மத்திய அரசு வழங்கும் சிறப்பு அந்தஸ்தை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளலாம்” என்றுள்ளார் அவர்.
இடஒதுக்கீட்டு கொள்கை பாதிக்கப்படும் என்று கருதி, சிறப்பு அந்தஸ்தை ஏற்றுக்கொள்ளும் முடிவை கிடப்பில் போட்டுள்ளது தமிழக அரசு. ஏனெனில், அந்த அந்தஸ்து ஏற்கப்பட்டால், இடஒதுக்கீட்டை மீறி, மெரிட் அடிப்படையில் மாணாக்கர் சேர்க்கை என்ற நிலை ஆதிக்கம் பெறும்.
இதுதொடர்பாக, தமிழக அரசை, திமுக உள்ளிட்ட மாநில எதிர்க்கட்சிகள் எச்சரித்துள்ளதுடன், இந்த விஷயத்தில் விழிப்புடன் செயல்பட வேண்டுமென சட்டமன்றத்திலும் அறிவுறுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. எனவேதான், மாநில அரசு இந்த விஷயத்தை இன்னும் கிடப்பில் போட்டுள்ளது. இந்நிலையில், துணைவேந்தரின் இந்தக் கருத்தும் முக்கியத்துவம் பெறுகிறது.