அகமதாபாத்,

ன்று அதிகாலை மும்பை சென்ற விமானம் மிரட்டல் காரணமாக அகமதாபாத் விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது. இது விமான பயணிகள் மட்டுமின்றி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்போது விமானம் அகமதாபாத்துக்கு திருப்பி விடப்பட்டதற்கான காரணம் தெரிய வந்துள்ளது. இதற்கு காரணமானவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை 2.55 மணிக்கு மும்பையில்  இறங்க வேண்டிய ஜெட் ஏர்வேஸ் பயணிகள்  விமானம்,  திடீரென அங்கு இறங்காமல் குஜராத் மாநிலம்  அகமதாபாத் விமான நிலையத்தில்  அதிகாலை 3.45 மணிக்கு தரையிறக்கப்பட்டது.

விமானம் தரையிறங்கியதும் பாதுகாப்பு படையினர் விமானத்தை சுற்றி வளைத்தனர். தொடர்ந்து விமான பயணிகள் ஒவ்வொருவரும் கடுமையாக சோதனை செய்யப்பட்டனர்.

இதுகுறித்து பயணிகள் கேட்டதற்கு,  பாதுகாப்பு காரணங்களுக்காக விமானம் திருப்பி விடப்பட்டதாகவும், அதன் காரணமாகவே சோதனை நடைபெற்று வருகிறது என்று  முதலில் கூறப்பட்டது.

ஆனால், இதற்கான காரணம் இப்போது வெளியாகி இருக்கிறது.

விமானத்தின் கழிவறையில் கிடந்த ஒரு கடிதம் காரணமாக விமானம் அகமதாபாத்துக்கு திருப்பி விடப்பட்ட தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

அந்த கடிதத்தில், விமானத்தினுள்   கடத்தல்காரர்கள் இருக்கிறார்கள். விமானத்தை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு உடனடியாகத் திருப்ப வேண்டும். வேறு எங்கும் விமானத்தைத் தரையிறக்கினால், பயணிகள் ஒவ்வொருவராக உயிரிழக்கும் சத்தத்தை கேட்பீர்கள். இதை நகைச்சுவையாக எடுத்துக்கொள்ள வேண்டாம். சரக்குகள் வைக்கப்படும் பகுதியில் சக்தி வாய்ந்த குண்டு இருக்கிறது. அல்லா இஸ் கிரேட் என்று உருது மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது.

இதுகுறித்து விமானிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், அவர் உடடினயாக ஏர்போர்ட் அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு பேசியதாகவும், அவர்களின் உத்தரவின்பேரில் விமானம் அகமதாபாத் விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், இந்த மிரட்டல் கடிதம் சல்லா பிர்ஜு என்பவரால் விமான பயணிகளை அச்சுறுத்துவதற்காக கழிவறையில்  வைக்கப்பட்டது விசாரணையில்  தெரிய வந்துள்ளதாக வான்வழிப் போக்குவரத்துத் துறைக்கான அமைச்சர் அசோக் கஜபதி ராஜு தெரிவித்துள்ளார்.

மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.