டுவென்டி-20 ஸ்பெஷலிஸ்ட் என்று அழைக்கப்படும் கேஎல் ராகுலின் பஞ்சாப் அணி, ஐபிஎல் தொடரில் லீக் சுற்றோடு ஏன் வெளியேறியது என்ற கேள்வி பலருக்கும் எழுந்திருக்கும்தான்!

இந்த ஐபிஎல் போட்டியில், அதிகபட்ச ரன்களான 223 ரன்களை எடுத்ததும் அவர்கள்தான். லீக் போட்டிகளிலேயே அதிகளவு மொத்த ரன்களை எடுத்ததோடு, பெரிய சதத்தையும் அடித்தவர் ராகுல்தான். இத்தொடரின் முதல் சதம் அவருடையதுதான்.

இத்தொடரிலேயே, பஞ்சாப் அணியில்தான் 2 பேட்ஸ்மென்கள் சதம் அடித்தனர். ஆனால், இவ்வளவு இருந்தும், ஒரு சமயத்தில் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து, பின்னர் மீண்டு வந்தனர். அவர்கள், பிளே ஆஃப் சுற்றுக்குள் சென்றுவிடுவர் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், முக்கியமான கடைசி இரண்டு போட்டிகளை கோட்டைவிட்டனர்.

முக்கியமான நேரங்களில் பதற்றமடைந்து விடுவதுதான் அந்த அணியின் பெரிய பலவீனமாக கூறப்படுகிறது. இதை, அவர்கள் பல போட்டிகளில் சேஸிங் செய்த விதத்தைப் பார்த்திருந்தாலே புரிந்துகொள்ளலாம். போட்டியை தேவையின்றி கடைசிப் பந்து வரையெல்லாம் கொண்டு சென்றார். இதை ஒருமுறை அந்த அணி உரிமையாளர்களுள் ஒருவரான ப்ரீத்தி ஜிந்தாவே கிண்டலடித்தார்.

மேலும், முக்கிய அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல், பல போட்டிகள் முடிந்த பிறகுதான் களமிறங்கினார். இதுவும் அந்த அணிக்கு பெரிய பின்னடைவாக ஆகிப்போனது. மேலும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிளென் மேக்ஸ்வெல் போன்றோர் முற்றிலுமாக சொதப்பினர்.

பந்துவீச்சாளர்களான முகமது ஷமி மற்றும் பிஷ்னோய் ஆகியோருக்கு சரியான ஒத்துழைப்பு அணியில் கிடைக்கவில்லை.

“வாழ்க்கையில் தவறுகள் என்பது சகஜம். ஒரு அணியாக இந்த சீசனில் நாங்கள் சில தவறுகளை செய்துள்ளோம். அதை ஏற்கிறோம். இதிலிருந்து பாடம் கற்று, அடுத்தமுறை மீண்டு வந்து சாதிப்போம்” என்றார் கேஎல் ராகுல்.